Last Updated : 15 Nov, 2020 08:28 AM

 

Published : 15 Nov 2020 08:28 AM
Last Updated : 15 Nov 2020 08:28 AM

எங்கள் நாட்டில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் இந்தியாவுக்குத் தொடர்பு: பாகிஸ்தான் அபாண்டக் குற்றச்சாட்டு


பாகிஸ்தானில் நடந்த பல்வேறு தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்தியா பின்புலத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன என்று பாகிஸ்தான் அரசு அபாண்டமாக இந்தியா மீது குற்றச்சாட்டு கூறியுள்ளது.

காஷ்மீர் எல்லையில் உள்ள எல்லைபக் கட்டுப்பாடுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று முன்தினம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதில் அப்பாவி மக்கள் 6 பேரும், ராணுவத்தினர் 5 பேரும் கொல்லப்பட்டனர். இந்தியா அளித்த பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 8 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்குக் கண்டனம் தெரிவிக்கும்வகையில், பாகிஸ்தான் தூதருக்குச் சம்மன்அனுப்பிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அத்துமீறித் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்குக் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்தது.

அமைதியைக் குலைக்க வேண்டும், ஜம்மு காஷ்மீரில் கலவரத்தைத் தூண்டவேண்டும் எனும் நோக்கில் பாகிஸ்தான் ராணுவத்தினர் செய்கிறார்கள். எல்லையில் தீவிரவாதிகளை இந்தியப்பகுதிக்குள் ஊடுருவ உதவுகிறார்கள் என்று கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்தியா சம்மன் அனுப்பி பாகிஸ்தான் தூதருக்கு கண்டனத்தை பதிவு செய்ததற்கு பதிலடியாக இந்தியா மீது வீண் பழி சுமத்தியது பாகிஸ்தான்.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, ராணுவச் செய்தித்தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பாபர் இப்திகார் நேற்று இஸ்லாமாபாத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில் “ எங்கள் நாட்டில் சமீபத்தில் நடந்த பல்வேறு தீவிரவாதத் தாக்குதலுக்கு பின்புலத்தில் இந்தியா இருக்கிறது. அதற்கான மறுக்க முடியாத ஆதாரங்கள் உள்ளன. இந்த ஆதாரங்களை நாங்கள் சர்வதேச அளவிலும் தேசத்தின் முன்பும் வெளிப்படுத்துவோம்.

இந்தியாவின் உளவுப்பிரிவுக்கும், ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளான ஜமாத் அல் அஹ்ரர், தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான், பலூச் விடுதலை ராணுவம், பலூசிஸ்தான் விடுதலை முன்னணி ஆகியவற்றோடு தொடர்பு இருக்கிறது.

பாகிஸ்தான், சீனா இடையே 6000 கோடி டாலர் செலவில் அமைக்கப்பட உள்ள பொருளாதாரக் கட்டமைப்புத் திட்டத்தை குலைக்க இந்தியா முயல்கிறது” எனக் குற்றம்சாட்டினர்.

ஆனால், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் ராணுவம் இதற்கு முன் வைத்தது. அப்போது, உள்நாட்டுப் பிரச்சினைகளை திசைதிருப்ப இதுபோன்ற குற்றச்சாட்டுகளை இந்தியா மீது சுமத்தக்கூடாது என்று இந்தியா கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x