பதற்றமானவர், பக்குவப்படாதவர்: ராகுல் காந்தி குறித்து சுயசரிதையில் குறிப்பிட்ட ஒபாமா

அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவுடன், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி: படம் உதவி | ட்விட்டர்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவுடன், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி: படம் உதவி | ட்விட்டர்.
Updated on
2 min read

பதற்றமானவர், பக்குவப்படாத தலைவர் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, “எ பிராமிஸ்ட் லாண்ட்” என்ற தலைப்பில் நினைவுக்குறிப்பு எழுதியுள்ளார். இந்த நூலில் உலக அளவில் தான் சந்தித்த அரசியல் கட்சித் தலைவர்கள், உலகத் தலைவர்கள் குறித்து விவரித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஒபாமாவின் இளமைக்கால வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை, அரசியல் நிகழ்வுகள், அதிபராக இருந்தபோது நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள் என 768 பக்கங்கள் கொண்ட நூலாக உருவாக்கப்பட்டு வரும் 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

அந்த நூல் குறித்து 'தி நியூயார்க் டைம்ஸ்' நாளேடு விமர்சனம் எழுதியுள்ளது. அந்த நூலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் குறித்தும், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், அமெரிக்க அதிபராகப் போகும் ஜோ பைடன் ஆகியோர் குறித்தும் ஒபாமா கருத்துத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குறித்து ஒபாமா குறிப்பிடுகையில், “பதற்றமானவர், பக்குவப்படாமல் இருக்கிறார். மாணவரைப் போல் பாடங்களை நன்றாகப் படித்து, ஆசிரியரை ஈர்க்கும் திறமை படைத்தவராக இருக்கலாம். ஆனால், குறிப்பிட்ட பாடத்தில் ஆழ்ந்த அறிவு பெறக்கூடிய விருப்பமோ அல்லது தகுதியோ இல்லாதவராக இருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து ஒபாமா குறிப்பிடுகையில், “அமெரிக்க முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் பாப் கேட்ஸ், மன்மோகன் சிங் இருவரிடமும் எந்த உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாத ஒற்றுமை இருப்பதைக் கண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமா, அவரின் மனைவி மிட்ஷெல் ஒபாமா ஆகிய இருவரும் இந்தியா வந்திருந்தபோது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், அவரின் மனைவி குர்ஷரன் கவுர் ஆகிய இருவருடனும் அமர்ந்து விருந்து சாப்பிட்டதையும் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் குறித்து ஒபாமா குறிப்பிடுகையில், “உடல்ரீதியாக அவர் குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராகப் போகும் ஜோ பைடன் குறித்து ஒபாமா குறிப்பிடுகையில், “மிகவும் ஒழுக்கமான, நேர்மையான, விசுவாசமான மனிதர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து ஒபாமா குறிப்பிடுகையில், “எங்களிடம் சார்லி கிறிஸ்ட், ரஹ் இமானுல் போன்ற ஆண்களின் அழகு குறித்துச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், சோனியா காந்தி போல, ஒன்று அல்லது இரு சம்பவங்கள் தவிர்த்து பெண்களின் அழகு குறித்துச் சொல்லப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in