

டென்மார்க் நாட்டில் மிங்க வகை கீரிப்பிள்ளைகள் கொத்துகொத்தாக கொன்று குவிக்கப்பட்டு வருவதற்கு விலங்கின ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பரவலாகக் காணப்படுகிறது மிங்க் வகை விலங்குகள். இவை சாதுவான உயிரினம். இவற்றின் அடர்த்தியான ரோமத்தைக் கொண்டு குளிருக்கு இதமான ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.
டென்மார்க்கில் ஃபர் தயாரிப்புத் தொழில் பிரதானம், அதற்கு மிங்க்கின் பங்களிப்பு மிக மிக பிரம்மாண்டம். டென்மார்க் நாட்டின் பொருளாதாரத்துக்கே இந்த வகை உயிரினங்கள் பெரும் பங்காற்றுகின்றன என்றால் அது மிகையாகாது. டென்மார்க் முழுவதும் மிங்குகள் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன,
இந்நிலையில், டென்மார்க்கில் உள்ள மிங்க் விலங்குகளிடமிருந்து புதுவகை கரோனா வைரஸ் உருவாவதாகவும் இதனால் கோவிட் தடுப்பூசி தயாரிப்பில் பின்னடைவு ஏற்படும் எனவும் அந்நாட்டின் பிரதமர் மெட்ட் ஃப்ரெட்ரிக்சென் தெரிவித்தார். மேலும், டென்மார்க்கில் உள்ள 17 மில்லியன் மிங்குகளையும் அழிப்பது மட்டுமே ஒரே வழி என்றும் அவர் பரிந்துரைத்தார்.
இதனையடுத்து, மிங்க் அழிப்பு தொடங்கியது. டென்மார்க் ஃபர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அறிக்கையின்படி 3-ல் 2 பங்கு மிங்குகள் அழிக்கப்பட்டுவிட்டன. மிங்க் ஃபர் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இதனை சீர் செய்ய இன்னும் மூன்றாண்டுகளாவது ஆகும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரதமரின் அறிவிப்புக்கு மிங்க இன அழிப்புக்கும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையில் விஞ்ஞானிகளோ மிங்க் குறித்த அறிவியல் அறிக்கை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகக் கூறியுள்ளனர். ஆனால், இப்போதே பத்து மில்லியன் மிங்க்குகள் கொல்லப்பட்டுவிட்டன.