Published : 12 Nov 2020 03:14 AM
Last Updated : 12 Nov 2020 03:14 AM

தோல்வியை ட்ரம்ப் ஏற்காமல் இருப்பது சங்கடமாக இருக்கிறது: ஜோ பைடன் வருத்தம்

அதிபர் தேர்தலில் பெற்ற தோல்வியை டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக்கொள்ளாமல் இருப்பது சங்கடத்தைத் தருகிறது என்று புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தெரிவித்தார்.

கடந்த வாரம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் புதிய அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் தேர்வு செய்யப்பட்டனர். இந்தத் தேர்தலில் போட்டியிட்ட அதிபர் ட்ரம்ப் தோல்வி அடைந்திருந்தாலும், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக கூறி தோல்வியை ஏற்க மறுத்து வருகிறார். மேலும் தேர்தல் தொடர்பாக அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் ட்ரம்ப் பிரச்சார குழு வழக்கு தொடுத்து உள்ளது.

இந்நிலையில், வெலிங்டன் மாகாணத்தில் செய்தியாளர்களுக்கு நேற்று முன்தினம் ஜோ பைடன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ட்ரம்பின் நடவடிக்கை அதிபரின் பதவிக்கு அழகாக இருக்காது. கடைசியில் அனைவரும் எதிர்பார்க்கும் ஜனவரி 20-ம் தேதி வரத்தான் போகிறது. அப்போது என்ன நடக்கும் என்பதை அனைவரும் பார்க்கத்தான் போகிறார்கள். தேர்தல் தோல்வியை அவர் ஏற்றுக்கொள்ளாதது சங்கடத்தை அளித்து வருகிறது.

நம்பிக்கையான எதிர்பார்ப்பு என்னவென்றால், ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அமெரிக்க மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். கடந்த 5, 6 ஆண்டுகளில் நாம் கண்டு வந்த கசப்பான அரசியலில் இருந்து நமது நாட்டை நாம் விடுவிப்போம் என்று நம்புகிறேன். அதிபர் ட்ரம்ப் அல்லது வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தரப்பு இதுவரை கூறி வரும் குற்றச்சாட்டுகளுக்கு தற்போது வரை எந்த ஆதாரங்களும் இல்லை. குடியரசுக் கட்சியினர் எனது வெற்றியை நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள்.

எனது வெற்றியை அடுத்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அவர்களது வாழ்த்துகள் எனக்கு ஊக்கமளிப்பதாக உள்ளன.

இவ்வாறு ஜோ பைடன் கூறினார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x