

கடந்த காலத்தில் முடிந்ததை ஈரான் மீண்டும் திறக்காது என்று ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகியது தொடர்பாக இக்கருத்தை ஈரான் முன்வைத்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த 4 வருடங்களாக ஈரானுடன் கடுமையான மோதல் போக்கைக் கடைப்பிடித்தார். அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார். மேலும், தொடர்ச்சியாக ஈரானின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தார். இதன் காரணமாக ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் அதிகரித்தது.
இந்த நிலையில் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபரானால் ஈரானின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவித்தனர்.
சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றார். 2021-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார்.
இந்த நிலையில் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிய நிலையில், புதிய அதிபர் பைடன் இதில் மாற்றத்தைக் கொண்டு வருவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இதற்கு ஈரான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரான் தரப்பில், “கடந்த காலத்தில் முடிந்ததை மீண்டும் திறக்க இயலாது. அமெரிக்கா விதிகளை மீறி அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகியது. அதற்கு அமெரிக்காதான் முழுக் காரணம். மேலும், ஈரானுக்கு எதிராக சர்வதேச விதிகளை மீறியதற்காக அமெரிக்கா பொறுப்பேற்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பொருளாதாரத் தடைகளால் ஈரான் அமெரிக்காவுக்குத் தலை வணங்காது என்ற பாடத்தை, அடுத்துவரும் அரசு நிர்வாகம் கற்றிருக்கும் என்று நம்புவதாக ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்தார்.