

கரோனா வைரஸுக்கு எதிராக உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்து, 3-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனையில் 90 சதவீதம் சிறப்பாகச் செயல்படுகிறது என்று ஃபைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பைஸர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனம் இணைந்து கரோனா வைரஸுக்கு எதிராகத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி, 3-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனையில் உள்ளன.
உலக அளவில் கரோனா வைரஸால் 5,08,82,608 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 12.64 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் இன்னும் கரோனா வைரஸுக்கு எதிராகத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்கிடையே இந்த ஆண்டு இறுதிக்குள் கரோனா தடுப்பு மருந்து எந்த விதத்திலும் உலக மக்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக அளவில் அமெரிக்காவின் ஃபைஸர், ஜெர்மனியின் பயோஎன்டெக் இணைந்து தயாரிக்கும் கரோனா தடுப்பு மருந்து தவிர்த்து 10 நிறுவனங்கள் கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பின் கடைசிக் கட்டத்தில் இருக்கின்றன. 4 நிறுவனங்கள் அடுத்தகட்ட ஆழ்ந்த ஆய்வில் உள்ளன.
இதற்கிடையே அமெரிக்காவின் ஃபைஸர், ஜெர்மனியின் பயோஎன்டெக் இணைந்து தயாரிக்கும் கரோனா தடுப்பு மருந்து, நோயாளிகளின் உடலில் 90 சதவீதம் சிறப்பாகச் செயல்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
3-வது கிளினிக்கல் பரிசோதனையில் நோயாளிகளுக்கு முதல் டோஸ் வழங்கப்பட்ட 28 நாட்களுக்குப் பின் 2-வது டோஸ் வழங்கப்பட்டது. 2-வது டோஸ் வழங்கப்பட்ட 7 நாட்களில் நோயாளிகளின் உடலில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது என்று ஃபைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஃபைஸர் நிறுவனத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆல்பர்ட் பருலா விடுத்த அறிக்கையில், “கரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் 3-வது கிளினிக்கல் பரிசோதனையில் இருக்கிறோம். நோயாளிகளுக்கு முதல் டோஸ் வழங்கப்பட்ட 28 நாட்களுக்குப் பின் 2-வது டோஸ் வழங்கிய 7 நாட்களில் 90 சதவீதம் மருந்து சிறப்பாகச் செயல்பட்டது.
உலக அளவில் உள்ள மக்களுக்குக் கரோனா தடுப்பு மருந்தை வழங்கக்கூடிய முக்கியமான கட்டத்தை நெருங்கிவிடடோம். உலக அளவில் மக்கள் சந்தித்துவரும் சுகாதாரப் பிரச்சினை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். இந்த உலகிற்கு அதிகமாகத் தேவைப்படும் நேரத்தில், எங்களின் தடுப்பு மருந்து கண்டிபிடிப்பு குறிப்பிடத்தகுந்த மைல்கல்லை எட்டியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.