Last Updated : 08 Nov, 2020 06:23 PM

 

Published : 08 Nov 2020 06:23 PM
Last Updated : 08 Nov 2020 06:23 PM

சோகமே வாழ்க்கை; சவால் நிறைந்த அரசியல்: சோதனைகளைச் சாதனையாக்கிய ஜோ பைடன்

சாதாரண அரசியல்வாதியே வார்த்தைகளை அளந்து பேசும் காலம் இது. அதுவே உலகின் முதல் நிலையில் இருக்கும் நாடாக இருந்தால் எவ்வளவு பொறுப்புடன் பேச வேண்டும்.

வெற்றியின் களிப்பில் 4 ஆண்டுகாலம் ட்ரம்ப் ஆடிய ஆட்டங்கள், பேசிய பேச்சுகள் மூலம் அவருக்கு அவரே குழி தோண்டிக்கொண்டார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

காரணம் அரசியலே வேண்டாம் என ஒதுங்கியிருந்த ஜோ பைடனையே மீண்டும் தீவிர அரசியலுக்கு இழுத்த பெருமை ட்ரம்ப்பையே சேரும்.

எப்படி ஒரு அதிபர் இருக்கக் கூடாது என்பதை ட்ரம்ப் காண்பித்தார். எப்படி இருக்கப்போகிறோம் என ஜோ பைடன் அறிவித்தார். இன்று இமாலய வெற்றி ஜோ பைடனுக்குக் கிடைத்துள்ளது.

இந்த வெற்றி ஜோ பைடனுக்கு அவ்வளவு எளிதில் கிடைத்து விடவில்லை. சொந்த வாழ்வில் சோகங்கள், தனிப்பட்ட உடல்நலப் பாதிப்பு எனப் பல சோகங்களைக் கடந்து வந்துள்ளார்.

பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களின் விடா முயற்சி குறித்து ஜோ பைடனை உதாரணம் காட்டலாம். ஜோ பைடனின் வெற்றிக்குப் பின் உள்ள உழைப்பை, சோகங்களைப் பார்ப்போம்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நீண்ட இழுபறிக்குப் பின் நேற்று முடிவுக்கு வந்தது. ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 290 பிரதிநிதிகளின் வாக்குகளைப் பெற்று அமெரிக்காவின் 46-வது அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தற்போது 77 வயதாகும் ஜோ பைடன்தான் அமெரிக்க வரலாற்றிலேயே அதிக வயதில் அதிபராகப் பதவியேற்கும் முதல் நபர்.

அரை நூற்றாண்டு காலமான பொதுவாழ்க்கையில் இருந்த வரும் ஜோ பைடனின் வாழ்வில் சோகமும், வலியும் நிறைந்த பக்கங்கள் ஏராளம்.

1942ஆம் ஆண்டு வடகிழக்கு பென்சில்வேனியாவின் ஸ்க்ரேன்டன் நகரில் ஒரு எளிய குடும்பத்தில் ஜோ பைடன் மூத்த மகனாகப் பிறந்தார். அவரது தந்தை ஜோசஃப் ராபினெட் பிடன் சீனியர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் ஒரு வியாபாரி. ஆரம்பத்தில் நல்ல வசதியோடு இருந்த அந்தக் குடும்பம், ஜோ பைடனின் பிறப்பின்போது கொடும் வறுமைக்குத் தள்ளப்பட்டது. பைடனுக்கு ஒரு தங்கை, இரு தம்பிகள் என்று உடன் பிறந்தவர்கள் மூவர்.

பள்ளிப் பருவத்தில் கால்பந்து மற்றும் பேஸ்பால் உள்ளிட்ட விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார் பைடன். அதுமட்டுமின்றி அவரது பெற்றோரும் அவரை மிகவும் துணிச்சல் மிக்கவராகவே வளர்த்துள்ளனர். தனது பெற்றோர் குறித்து ஒரு பேட்டியில் குறிப்பிடும் ஜோ பைடன், ‘எனது தந்தை எத்தனை முறை கீழ விழுந்தாலும் மீண்டும் எழக்கூடியவராகவே இருந்தார்’ என்று கூறுகிறார்.

மேலும், தன்னை விடப் பெரிய பையன் ஒருவன் தன்னைக் கேலி செய்ததைப் பற்றி தன் தாயிடம் கூறியபோது, ‘அவனுடைய மூக்கை உடைத்துவிட்டு வா. அப்போதுதான் நாளை நீ தெருவில் தைரியமாக நடந்து செல்லமுடியும்’ என்று தனது தாய் கூறியதாக பைடன் குறிப்பிடுகிறார்.

சிறுவயதில் திக்குவாய் பிரச்சினையுடன் இருந்த பைடன் தொடர்ந்து சக மாணவர்களால் கேலிக்கு ஆளாகி வந்துள்ளார். மிக நீண்ட கட்டுரைகளையும், கவிதைகளையும் மனனம் செய்து அவற்றைக் கண்ணாடி முன்பு நின்று சத்தமாக ஒப்புவித்து தனது திக்குவாய் பிரச்சினையிலிருந்து மீண்டுள்ளார் பைடன்.

டெலவர் மாகாணத்தில் அமைந்துள்ள பிரபலமான ஆர்ச்மியர் பள்ளியில் படித்த ஜோ பைடன், தனது கல்விச் செலவுக்காக பள்ளியின் ஜன்னல்களைச் சுத்தம் செய்வது, மைதானத்தில் மண்டிக் கிடக்கும் புதர்களை அகற்றுவது போன்ற வேலைகளைச் செய்து வந்தார்.

1961ஆம் ஆண்டு தனது பள்ளிப் படிப்பை நிறைவு செய்த பைடன், டெலவர் பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் அரசியல் படித்தார். கூடவே கால் பந்தாட்டத்தையும் தொடர்ந்தார். இந்தச் சூழலில்தான் அவர் அரசியல் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.

1965ஆம் ஆண்டு சீரக்யூஸ் சட்டக்கல்லூரியில் தனது சட்டப்படிப்பைத் தொடங்கிய பைடன் அடுத்த ஆண்டே தனது கல்லூரிக் காதலியான நீலியா ஹண்டரைத் திருமணம் செய்து கொண்டார்.

1968ஆம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்த ஜோ பைடன் தன்னை ஜனநாயகக் கட்சியில் இணைத்துக் கொண்டு செயல்படத் தொடங்கினார். இதற்கிடையில் பைடனுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன.

1972ஆம் ஆண்டு அமெரிக்க செனட் சபை உறுப்பினர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான கேலப் பாக்ஸ் என்பவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டார் ஜோ பைடன். அவரிடம் பிரச்சாரத்திற்குத் தேவையான பணபலமோ, ஆள்பலமோ இல்லை. அவரது குடும்ப உறுப்பினர்களே அவருக்காகப் பிரச்சாரம் செய்து வந்தனர். பைடனின் தங்கை மற்றும் பெற்றோர்கள் தினமும் அயராது பைடனுக்காக பிரச்சாரம் மேற்கொண்டனர். அதன் விளைவாக, டெலவர் மாகாணத்தின் பெரும்புள்ளியாகத் திகழ்ந்த கேலப் பாக்ஸை வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார் ஜோ பைடன். அமெரிக்க வரலாற்றிலேயே மிக இளம் வயதிலேயே செனட் சபை உறுப்பினரான ஐந்தாவது நபர் பைடன். அப்போது அவருக்கு வயது 29.

வெற்றிப்படிக்கட்டுகளின் ஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்த ஜோ பைடனின் வாழ்வில் ஒரு மிகப்பெரிய இடி இறங்க காத்துக் கொண்டிருந்தது. 1972ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய வாரம், பண்டிகைக்கான பொருட்கள் வாங்குவதற்காக ஜோ பைடனின் காதல் மனைவி நீலியா தனது மூன்று குழந்தைகளையும் காரில் அழைத்துச் சென்றார். அப்போதுதான் அந்த துர்சம்பவம் நிகழ்ந்தது. எங்கிருந்தோ சோளக்கதிர்களை சுமந்து வந்த பெரிய லாரி ஒன்று அவர்கள் வந்த காரில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே நீலியா மற்றும் அவரது 9 வயது மகளான ஏமி இருவரும் உயிரிழந்தனர். மகன்கள் பியூ மற்றும் ராபர்ட் இருவரும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

மனைவி மற்றும் மகளின் இழப்பை பைடனால் ஜீரணிக்க முடியவில்லை. தற்கொலை எண்ணங்கள் கூட அவருக்கு எழுந்தன. இந்த இழப்பு குறித்து குறிப்பிடுகையில், தனக்குக் கடவுள் மீது கோபம் வந்ததாக கூறுகிறார் பைடன்.

தனது மகன்களின் நலனைக் கருத்தில் கொண்டு செனட் சபை உறுப்பினர் பதவியைக் கைவிட பைடன் முடிவு செய்தார். இதை செனட் சபையின் மூத்த தலைவர்களிடமும் தெரிவித்தார். ஆனால், அவர்கள் தொடர்ந்து வற்புறுத்தவே ராஜினாமா முடிவைக் கைவிட்டார். எனினும் வாஷிங்டனில் நடைபெற்ற புதிய செனட் உறுப்பினர்களுக்கான பதவிப் பிரமாணத்தில் பைடன் கலந்து கொள்ளவில்லை. மாறாக தனது மகன்கள் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை அறையிலேயே பதவியேற்றுக் கொண்டார் பைடன்.

தனது மகன்களுக்காக டெலவரிலேயே தங்கிவிட்டார் பைடன். அடுத்த 36 ஆண்டுகள் அங்கிருந்து தினமும் ரயிலில் வாஷிங்டனுக்குச் சென்று தனது பணிகளைச் செய்து வந்தார்.

ஆசிரியையான ஜில் ட்ரேஸி என்பவரை 1977ஆம் ஆண்டு ஜோ பைடன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். ஜில் ட்ரேஸியைப் பற்றிக் கூறும்போது ‘தான் மீண்டும் பொதுவாழ்க்கையில் நுழைய தனது இரண்டாம் மனைவியே காரணம்’ என்று கூறுகிறார் பைடன்.

1987ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார் பைடன். அதற்கான பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது அவருக்குத் தலையில் அடிக்கடி கடுமையான வலி ஏற்பட்டது. அவருக்கு மூளையில் இருக்கும் ரத்த நாளங்களில் இரண்டு மிகப்பெரிய வீக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக தலையில் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் எனவும் மருத்துவர்கள் அவரிடம் தெரிவித்தனர்.

மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், அதனால் ஏற்பட்ட பக்கவிளைவாக அவரது நுரையீரலில் ரத்த உறைவு ஏற்பட வழிவகுத்தது. இதனால் மீண்டுமொரு அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் பைடன். எப்போதும் தடைகளிலிருந்து மீண்டெழும் குணம் படைத்த பைடன், ஏழு மாத ஓய்வுக்குப் பிறகு மீண்டும் அரசியல் வாழ்க்கையில் நுழைந்தார்.

20 ஆண்டு காலம் அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியின் தொடர் தோல்விகளுக்குப் பின்னர் 2007 ஆம் ஆண்டு மீண்டும் அதிபர் தேர்தலில் களமிறங்கினார் பைடன். செனட் சபையின் நீண்டகால அனுபவம் வாய்ந்த உறுப்பினராக இருந்தும் ஒபாமா மற்றும் ஹிலாரி கிளிண்டனின் பிரச்சாரங்களுக்கு முன்னால் பைடனின் பிரச்சாரம் எடுபடாமல் போனது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஜனநாயகக் கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான தேர்வில் ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே பெற்றிருந்தார். அன்று மாலையே போட்டியிலிருந்து விலகிக் கொண்டார் பைடன்.

படுதோல்வியைத் தழுவியிருந்தாலும், அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பைடனின் பிரச்சார முறை பெரிதும் பேசப்பட்டது. குறிப்பாக ஒபாமாவின் கவனம் பைடனின் பக்கம் திரும்பியது. பைடனின் பிரச்சார உத்தியால் பெரிதும் கவரப்பட்ட ஒபாமா அவரைத் துணை அதிபராகப் போட்டியிடுமாறு தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் வைத்தார்.

முதலில் தயங்கிய பைடன், பின்னர் அதனை ஏற்றுக்கொண்டார். 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம், தங்களை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர்களான ஜான் மெக்கெய்ன் மற்றும் சாரா பேலின் இருவரையும் வீழ்த்தி ஒபாமா மற்றும் பைடன் இருவரும் வெற்றி பெற்றனர். 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் 44-வது அதிபராக பராக் ஒபாமாவும், 47-வது துணை அதிபராக ஜோ பைடனும் பதவியேற்றுக் கொண்டனர்.

நான்கு ஆண்டுகால ஆட்சி முடிந்து, 2012ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்தக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. துணை அதிபராகப் பதவியேற்ற மூன்றாம் ஆண்டில் (2015) ஜோ பைடனின் வாழ்வில் மீண்டும் ஒரு பேரிழப்பு ஏற்பட்டது. பைடனின் மூத்த மகனான ப்யூ பிடன் மூளைப் புற்றுநோயால் தனது 42-வது வயதில் மரணமடைந்தார். மகனின் இழப்பு பைடனை மனத்தளவில் பெரிதும் சோர்வடையச் செய்தது.

2016ஆம் ஆண்டுக்கான அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார் பைடன். அவருக்காக வெள்ளை மாளிகையில் ஒரு விழாவை ஏற்பாடு செய்தார் ஒபாமா. அந்த விழாவில் பேசுகையில், அமெரிக்கா கண்டதிலேயே சிறந்த துணை அதிபர் என்றும், அமெரிக்க வரலாற்றின் சிங்கம் என்றும் பைடனுக்குப் புகழாரம் சூட்டினார் ஒபாமா.

ஒபாமாவுக்குப் பிறகு அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப்பின் செயல்பாடுகள் அரசியல் வாழ்விலிருந்து ஒதுங்கியிருந்த பைடனுக்குக் கோபத்தை ஏற்படுத்தின. தொடர்ந்து சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் ட்ரம்ப்பின் நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்து வந்தார் பைடன். ட்ரம்ப்புக்கு நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியவில்லை என்று சாடினார்.

2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் பைடன் போட்டியிடுகிறார் என்று பல்வேறு ஊடகங்களும் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தன. ஆனால் அதிபர் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்றும், தனது மகனின் இழப்பிலிருந்து தான் இன்னும் முழுமையாக மீளவில்லை என்றும் அச்செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பைடன்.

ஆனால், கடந்த ஆண்டு (2019) ஏப்ரல் மாதம் பெரும்பாலான அமெரிக்கர்கள் எதிர்பார்த்திருந்த அந்த அறிவிப்பை வெளியிட்டார் ஜோ பைடன். மூன்றரை நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில் பேசிய பைடன் அமெரிக்காவிற்கு தற்போது ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் தன் வாழ்நாளில் பார்க்காதது என்று குறிப்பிட்டு 2020 அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவரான கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்தார்.

கடந்த 3ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக தேர்தல் முடிவுகளில் இழுபறி நீடித்து வந்தது. அமெரிக்காவின் 50 மாகாணங்களில் மொத்தம் 538 பிரதிநிதிகள் உள்ளனர். இதில் 270 பிரதிநிதிகளின் வாக்குகளைப் பெறும் வேட்பாளர்தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும். ஜோ பைடன் 290 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றதையடுத்து, அவர் வெற்றி பெற்றதாக அமெரிக்க ஊடகங்கள் அறிவித்தன.

பொய்யான பிரச்சாரங்கள், தரம் தாழ்ந்த எதிர் விமர்சனங்கள், அதிபர் வேட்பாளர் விவாதங்களில் மைக்கை அணைத்தது போன்ற இடையூறுகளையெல்லாம் கடந்து அமெரிக்க வரலாற்றிலேயே அதிக வாக்குகளைப் பெற்ற அதிபர் என்ற பெருமையைத் தக்க வைத்துள்ளார் ஜோ பைடன்.

கரோனா தொற்றைக் கையாண்டது, நட்பு நாடுகளை உதாசீனப்படுத்தியது, நிறவெறிக்கு ஆதரவாக நின்றது, பருவநிலை மாற்றம் அமைப்பைப் புறக்கணித்து வெளியேறியது, தொற்று மையத்தை இழுத்து மூடியது என ஒரு நாட்டின் அதிபராக எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக ட்ரம்ப் விளங்கியதன் விளைவே தோல்வியைச் சந்தித்துள்ளார்.

முன்னேறிய சமுதாயமும், அமெரிக்க இளைஞர்களும் ட்ரம்ப்பின் பிற்போக்குச் சிந்தனையை ஆதரிக்கவில்லை.

ட்ரம்ப்புக்கு நேர்மாறாக ஒன்றுபட்ட அமெரிக்கா, கரோனா குறித்த தெளிவான அறிவியல் அணுகுமுறை, அண்டை நாடுகளின் நட்புறவு குறித்த பிரச்சாரம் ஜோ பைடனை குடியரசுக் கட்சியின் கோட்டையான மாகாணங்களிலும் கொடி நாட்ட வைத்தது.

அமெரிக்க அதிபர்கள் தவறான நபர்களாக வந்தபோது அதன் விளைவை உலக மக்கள் அனுபவித்துள்ளனர். பொறுப்பான அணுமுறையுள்ள ஜோ பைடன் அமெரிக்க அதிபர் ஆவதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்ட உலக சமுதாயத்துக்கு நன்மை கிடைத்தால் அனைவருக்கும் மகிழ்ச்சியே.

வாழ்த்துகள் ஜோ பைடன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x