

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 46-வது அதிபராகப் பதவி ஏற்க இருக்கும் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடனுக்கும், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட துணை அதிபராகப் பதவி ஏற்க இருக்கும் கமலா ஹாரிஸுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3-ம் தேதி நடந்தது. அதிபர் தேர்தலில் தொடக்கத்திலிருந்தே ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலை வகித்து வந்தார். வெற்றிக்குத் தேவைப்படும் 270 எலெக்ட்ரால் காலேஜில் 266 இடங்கள் பெற்று முன்னிலையில் இருந்தநிலையில், பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ பைடன் வெற்றி நேற்று உறுதியானது. இதையடுத்து, 270க்கும் மேற்பட்ட எலெக்ட்ரால் காலேஜைப் பெற்றதையடுத்து, தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அமெரிக்க ஊடகங்கள் அறிவித்தன.
அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வெற்றியை மக்கள் கொண்டாடி வருகின்றனர். உலக நாடுகளின் தலைவர்கள் ஜோ பைடன், ஹாரிஸுக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் 46-வது அதிபராகப் பதவி ஏற்க இருக்கும் ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு பிரதமர் மோடியும் ட்விட்டரில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி பதிவிட்ட கருத்தில், “உங்களின் மிகச்சிறந்த வெற்றிக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் பைடன். நீங்கள் துணை அதிபராக இருந்தபோது, இந்திய-அமெரிக்க நட்புறவை வலிமைப்படுத்த உங்களின் பங்களிப்பு மதிப்பிடமுடியாதது. இந்திய-அமெரிக்க நட்புறவு மிகப்பெரிய உச்சத்தை அடைய நாம் மீண்டும் ஒன்றிணைந்து செயல்படுவதை எதிர்நோக்குகிறேன்.
துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துகள். உங்களின் வெற்றி மிகப்பெரிய மைல்கல். இந்த வெற்றி உங்களின் சித்திகளுக்கு மட்டுமல்ல, இந்திய அமெரிக்கர்களுக்கும் உரித்தானது. உங்களின் ஆதரவுடன், உங்கள் தலைமையில் இந்திய-அமெரிக்க உறவு வலிமையாகும் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் மற்றும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் விடுத்த வாழ்த்துச் செய்தியில்,“ அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோஸப் ஆர் பைடன், துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு என் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இந்திய-அமெரிக்க நட்புறவு வலிமையடைய பைடனுடன் இணைந்து செயலாற்ற விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.