Published : 08 Nov 2020 03:11 AM
Last Updated : 08 Nov 2020 03:11 AM

ராவணனை ராமர் வதம் செய்தது போல கரோனா வைரஸை வெற்றி கொள்வோம்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீபாவளி வாழ்த்து

லண்டன்

தீபாவளி பண்டிகை வரும்14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, பிரிட்டனில் உள்ள இந்தியர்களுக்கு பிரதமர்
போரிஸ் ஜான்சன் நேற்று தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஓர் அசாதாரணமான சூழலை பிரிட்டன் சந்தித்து வருகிறது. வைரஸ் பரவலை தடுப்பதற்காக தற்போது 2-ம் கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால், மக்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். எனினும், எதிர்கால நலன் கருதி இந்தப் பொது முடக்கத்துக்கு மக்கள் தங்களின் ஆதரவை வழங்க வேண்டும்.

நமக்கு முன்பு ஏராளமான சவால்கள் நிறைந்திருக்கின்றன. அதே நேரத்தில், பிரிட்டன் மக்களின் தீர்க்கமான மன உறுதியாலும், அறிவுக் கூர்மையாலும் இந்த சவால்களை எளிதில் வெல்ல முடியும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

ஒளியைக் கொண்டு இருளை வெற்றி கொள்வது எப்படி, நன்மையை கொண்டு தீயவற்றை தோற்கடிப்பது எப்படி என்பதே தீபாவளி பண்டிகை நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம். ராமரும், சீதையும்தீயவனான ராவணனை எவ்வாறு வதம் செய்து உலகுக்கு ஒளியை பரப்பினார்களோ, அதேபோல நாமும் கரோனா வைரஸை வெற்றி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x