

பொருளாதாரத் தடைகளால் ஈரான் அமெரிக்காவுக்குத் தலை வணங்காது என்ற பாடத்தை அமெரிக்காவில் அடுத்துவரும் அரசு நிர்வாகம் கற்றிருக்கும் என்று நம்புவதாக ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “மூன்று வருட அனுபவம் அமெரிக்காவுக்கு நல்ல பாடத்தைக் கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன். எங்கள் மக்கள் பொருளாதார ரீதியான தீவிரவாதத்தை மூன்று வருடங்களாக அனுபவித்திருக்கிறார்கள்.
பொருளாதாரத் தடைகளால் ஈரான் அமெரிக்காவுக்குத் தலை வணங்காது என்ற பாடத்தை அமெரிக்காவில் அடுத்துவரும் அரசு நிர்வாகம் கற்றிருக்கும் என்று நம்புகிறேன்” என்று ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஈரான் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமெனி, “அமெரிக்காவுடனான எங்கள் கொள்கை எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். எந்தத் தனிப்பட்ட நபரைச் சார்ந்தும் மாறாது. அமெரிக்க அதிபராக யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்பது முக்கியம் அல்ல’’ என்று தெரிவித்திருந்தார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த 4 வருடங்களாக ஈரானுடன் கடுமையான மோதல் போக்கைக் கடைப்பிடித்தார். அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார். மேலும், தொடர்ச்சியாக ஈரானின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தார். இதன் காரணமாக ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் அதிகரித்தது.
இந்த நிலையில் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபரானால் ஈரானின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் 59-வது அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும், துணை அதிபர் வேட்பாளராக செனட்டர் கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர். குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும், துணை அதிபர் பதவிக்கு மைக் பென்ஸும் 2-வது முறையாகப் போட்டியிட்டனர்.
ஜோ பைடன், கமலா ஹாரிஸ் இருவரும் வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.