Last Updated : 07 Nov, 2020 02:45 PM

 

Published : 07 Nov 2020 02:45 PM
Last Updated : 07 Nov 2020 02:45 PM

அதிபர் தேர்தலில் வெற்றி உறுதி: காத்திருக்காமல் பொருளாதார மேம்பாடு, கரோனா தடுப்பு பணியைத் தொடங்கிய ஜோ பைடன், கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் இருவரும் வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டநிலையில், பதவி ஏற்புக்காகக் காத்திருக்காமல், நாட்டின் பொருளாதார மேம்பாடு, கரோனா தடுப்பு நடவடிக்கைப் பணியில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.

அமெரிக்காவில் 59-வது அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும், துணை அதிபர் வேட்பாளராக செனட்டர் கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர். குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும், துணை அதிபர் பதவிக்கு மைக் பென்ஸும் 2-வது முறையாகப் போட்டியிட்டனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்த முறை வாக்களிக்க 23.90 கோடி பேர் தகுதி பெற்றனர். நவம்பர் 3-ம் தேதி நடந்த தேர்தலில் இதுவரை 16 கோடி பேர் வாக்களித்துள்ளனர். அதாவது 66.9 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

538 வாக்காளர் தொகுதிகளில் 270 வாக்காளர் தொகுதிகளை வெல்லும் வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். அந்த வகையில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் இதுவரை 264 வாக்காளர் தொகுதி வாக்குகளைப் பெற்றுள்ளார். ஆனால், அதிபர் ட்ரம்ப் இதுவரை 213 வாக்காளர் தொகுதி வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.

இழுபறியாக இருந்துவரும் 4 முக்கிய மாகாணங்களான அரிசோனா, ஜார்ஜியா, நிவேடா, பென்சில்வேனியா, நார்த் கரோலினா ஆகியவற்றில் அதிபர் ட்ரம்ப்பைவிட, தற்போது ஜோ பைடன்தான் முன்னிலையில் இருந்து வருகிறார். இன்னும் 6 வாக்காளர் தொகுதி வாக்குகள் இருந்தால் ஜோ பைடன் வென்றுவிடுவார். இதனால் ஏறக்குறைய ஜோ பைடன் வெற்றி உறுதியாகியுள்ளது.

இந்தச் சூழலில் இறுதி முடிவுக்காகக் காத்திருக்காமல் ஜோ பைடனும், கமலா ஹாரிஸும் அமெரிக்காவின் பொருளாதார மேம்பாடு, மற்றும் கரோனா வைரஸ் தடுப்புப் பணியைத் தொடங்கிவிட்டனர். டெலாவேர் நகரில் தொற்றுநோய் தடுப்பு வல்லுநர்கள், மருத்துவ வல்லுநர்கள், பொருளாதார வல்லுநர்களுடன் ஜோ பைடனும், கமலா ஹாரிஸும் நேற்று ஆலோசனை நடத்தினர்.

அதன்பின் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''தேர்தலில் இறுதி முடிவுக்காகக் காத்திருக்கும்போது, நாங்கள் மக்கள் பணியாற்றக் காத்திருக்கவில்லை என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன். என்னுடைய அதிபர் பணியின் முதல் நாளில் இருந்தே, கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிடுவேன் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஏனென்றால் லட்சக்கணக்காண மக்களை இழந்துவிட்டோம், வரும் காலத்தில் பலரின் வாழ்க்கையை, உயிரைக் காக்க வேண்டும். கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்துவிட்ட நிலையில் அதிலிருந்து மீண்டுவருவது குறித்து மருத்துவ வல்லுநர்களுடன் நானும், கமலா ஹாரிஸும் ஆலோசனை நடத்தினோம்.

அமெரிக்காவில் 2 கோடி மக்களுக்கும் அதிகமானோர் வேலையின்மையில் இருக்கிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் வீட்டுக்கு வாடகை தரமுடியாமலும், சாப்பிட வழியில்லாமலும் இருக்கிறார்கள். பொருளாதார மந்த நிலையிலருந்து விரைவாக மீண்டு வரவும் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் வருந்தத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நாள்தோறும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உச்ச கட்டமாக 2 லட்சம் பேர் நாள்தோறும் பாதிக்கப்படலாம் என நம்புகிறேன். கரோனா உயிரிழப்பு 2.40 லட்சமாக அதிகரித்துள்ளது, நாடு முழுவதும் வீடுகளில் 2.40 லட்சம் உயிர்களை இழந்து, வீடுகளில் அவர்களின் இருக்கை காலியாக இருக்கிறது.

அன்புக்குரியவர்களை இழந்துவாடும் அவர்களின் வேதனைகளை மதிப்பிட முடியாது. பல குடும்பத்தார் மிகுந்த துக்கத்தில் இருந்து மீளவில்லை. மக்கள் தேர்தல் முடிவு வரும் அமைதியாகவும், பொறுமையாகவும் இருங்கள். தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது.

அனைத்து வாக்குகளும் எண்ணி முடியட்டும். இந்த நாட்டில் 244 ஆண்டுகளாக இருக்கிறோம் என்பதை நாங்கள் நிரூபிக்கிறோம். ஜனநாயகம் வேலை செய்கிறது. உங்கள் வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையைத் தடுத்த நிறுத்த செய்யும் செயல்களை, முயற்சிகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இனிமேலும் அது நடக்காது.

நம்முடைய அரசியல் என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு அல்ல. தேசத்துக்கானது. எனக்கு எதிராக வாக்களித்தவர்களுக்கும் சேர்த்துதான் நான் பணியாற்றுவேன். அதுதான் என்னுடைய பணி. அதிபர் கடமையும் அதுதான்.

நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைகள், கரோனா வைரஸ் பாதிப்பு, இனவாதம், பருவநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகள் இருக்கும்போது, இனிமேலும், பிரிவினை வாதத்தோடு நாம் செயல்பட்டு நேரத்தை வீணடிக்கக் கூடாது. நம்முடைய குழந்தைகள், பேரன்கள், சந்ததியினருக்குத் தேவையான வளமையான எதிர்காலத்தை நாம் உருவாக்க வேண்டும், அதற்கான வாய்ப்பும் இருக்கிறது''.

இவ்வாறு பைடன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x