

சிரியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளதால் ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி செல்லும் அகதிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
சிரியாவில் அமெரிக்க கூட்டுப் படைகள் மட்டுமே வான்வழி தாக்குதலை நடத்தி வந்த நிலையில் அந்த நாட்டு அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய போர் விமானங்களும் கடந்த ஒரு மாதமாக அங்கு கடு மையான தாக்குதலை நடத்தி வருகின்றன.
இதனால் சிரியாவில் உள் நாட்டுப் போர் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. போரில் இருந்து தப்பிக்க பெரும்பான்மையான சிரியா மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு படை யெடுத்து வருகின்றனர்.
கிரீஸ் நாட்டின் தீவுகளுக்கு நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் வருவதாக அந்த நாட்டு அரசு தெரிவிக்கிறது. இதே எண்ணிக்கையில் துருக்கி நாட்டிலும் கடல்மார்க்கமாக அகதிகள் கரையேறுகின்றனர். அவர்கள் அங்கிருந்து ஜெர்மனி, ஆஸ்திரியாவுக்கு செல்கின்றனர்.
இதனிடையே ஹங்கேரி உள்ளிட்ட நாடுகள் தங்களின் எல்லையை மூடிவிட்டதால் அகதிகள் அங்கும் இங்கும் அலைக் கழிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஸ்லோவேனியா நாடு வழியாக 58 ஆயிரம் அகதிகள் கடந்து சென்றுள்ளனர். இன்னும் ஏராளமான அகதிகள் கடும் குளிர், மழையில் அந்த நாட்டு எல்லையில் காத்து கிடக்கின்றனர்.
இதனிடையே ஸ்லோவேனியா, குரேசியா, செர்பியா ஆகிய நாடுகளும் தங்கள் எல்லைப் பகுதிகளை மூடப் போவதாக எச்சரித்து வருகின்றன. இதனால் அகதிகளின் நிலைமை கேள்விக் குறியாகி உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு லிபியா கடற்கரையில் 40 அகதிகளின் உடல்கள் கரை ஒதுங்கின. சுமார் 30 பேரை காணவில்லை. அவர்களும் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.