Published : 06 Nov 2020 02:55 PM
Last Updated : 06 Nov 2020 02:55 PM

அமைதியாகுங்கள் ட்ரம்ப்; அமைதியாகுங்கள்: கிரெட்டா துன்பெர்க் பதிலடி

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதற்கு கிரெட்டா துன்பெர்க் பதிலடி கொடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3-ம் தேதி நடந்தது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப்பும் அதிபர் பதவிக்குப் போட்டியிட்டனர்.

அமெரிக்க வரலாற்றில் 120 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தத் தேர்தலில் 66.9 சதவீத வாக்குகள் பதிவாயின. கரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக 11 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை தபால் மூலம் செலுத்தினர்.

மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் பெரும்பாலான மாகாணங்கள் வாக்கு எண்ணிக்கையைத் தொடங்கி தேர்தல் முடிவுகளை அறிவித்துவிட்டன. மொத்தம் உள்ள 538 பிரதிநிதிகள் வாக்குகளில் 270 பிரதிநிதி வாக்குகள் பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டு, அதிபராக முடியும்.

அந்த வகையில் ஜோ பைடன் இதுவரை வெற்றிக்கு அருகே 264 பிரதிநிதிகளின் வாக்குகளைப் பெற்றுள்ளார். இன்னும் ஜோ பைடன் வெற்றிக்கு 7 பிரதிநிதிகளின் வாக்குகள் தேவைப்படுகின்றன. அதேசமயம், அதிபர் ட்ரம்ப் 214 பிரதிநிதிகளின் வாக்குகளை மட்டும் பெற்றுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி ஜோ பைடன் 50.5 சதவீத வாக்குகள் அதாவது 7 கோடியே 31 லட்சத்து 47 ஆயிரத்து 934 வாக்குகள் பெற்றுள்ளார். ஆனால், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 47.9 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

மிகவும் இழுபறியாக இருந்து வரும் அரிசோனா, மிச்சிகன், விஸ்கான்சின், நியூ ஹெமிஸ்ஃபயர் ஆகியவற்றில் ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார். ஃப்ளோரிடா, ஐயோவா, ஒஹியோ, டெக்சாஸ் ஆகிய மாகாணங்களில் ட்ரம்ப் முன்னிலையுடன் உள்ளார்.

ஆனால், ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை ஏற்காத அதிபர் ட்ரம்ப் பல்வேறு மாகாணங்களில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

மேலும், வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் என்று ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் இதனை கிரெட்டா துன்பெர்க் விமர்சித்துள்ளார்.

ட்ரம்ப் பதிவைக் குறிப்பிட்டு கிரெட்டா, “இது அபத்தமானது. ட்ரம்ப் தனது கோபத்தைக் கையாள்வது தொடர்பாகச் செயலாற்ற வேண்டும். இதற்காக அவர் தனது நண்பருடன் இணைந்து பழைய படம் ஒன்றைப் பார்க்க வேண்டும். அமைதியாகுங்கள் ட்ரம்ப். அமைதியாகுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கிரெட்டா துன்பெர்க், டைம்ஸ் இதழின் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த நபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், கிரெட்டா துன்பெர்க் இடம் பெற்றுள்ள அட்டைப் படத்தை ‘இளைஞர்களின் சக்தி’ என்று குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் டைம்ஸ் இதழ் வெளியிட்டிருந்தது. இதனை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்தார்.

அப்போது ட்ரம்ப், ''இது அபத்தமானது. கிரெட்டா தனது கோபத்தைக் கையாள்வது தொடர்பாகச் செயலாற்ற வேண்டும். அவர் தனது நண்பருடன் இணைந்து பழைய படம் ஒன்றைப் பார்க்க வேண்டும்'' என்றார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப் பதிவிட்ட நிலையில், முன்பு அவர் குறிப்பிட்ட அதே வார்த்தைகளைக் குறிப்பிட்டு ட்விட்டரில் கிரெட்டா பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x