Published : 06 Nov 2020 01:55 PM
Last Updated : 06 Nov 2020 01:55 PM

அதிகரிக்கும் கரோனா; இந்தியா, பிரிட்டனைச் சேர்ந்த பயணிகளுக்குத் தடை: சீன அரசு உத்தரவு

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில், இந்தியா, பிரிட்டன், பிலிப்பைன்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தற்காலிகமாக சீனாவுக்குள் வர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. சீனத் தூதரகம் சார்பில் அதிகாரபூர்வமாக விசா பெற்றிருந்தாலும், அந்த விசா ரத்து செய்யப்படுவதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை தற்காலிகமானதுதான். காலப்போக்கில் சூழலில் முன்னேற்றம் ஏற்படும்போது படிப்படியாகக் கட்டுப்பாடுகள் விலக்கப்படும் என்று சீனா தெரிவித்துள்ளது.

இந்திய அரசு சார்பில் 4 விமானங்கள் சீனாவுக்கு இயக்கப்பட இருந்தன. இதன் காரணமாக இனிமேல் இயக்கப்படுமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகம் சார்பில் கூறுகையில், "வந்தே பாரத் மிஷன் திட்டத்தில் டெல்லி-வூஹான்-டெல்லி இடையே நவம்பர் 6-ம் தேதி விமானம் இயக்கப்பட இருந்தது. ஆனால், இந்த விமானம் இயக்கப்படும் தேதி மாற்றப்பட்டு மீண்டும் பட்டிலியடப்படும். விமானத்தை இயக்குவது குறித்து சீன அதிகாரிகளுக்குக் கடிதம் அனுப்பியும் அதற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை” எனத் தெரிவித்தனர்

ஏர் இந்தியா நிறுவனம் தரப்பில், வந்தே பாரத் விமானங்கள் நவம்பர் 13, 20, 27, டிசம்பர் 4-ம் தேதி சீனாவுக்கு இயக்கப்பட இருந்தன. இந்த விமானங்கள் இயக்குவது குறித்தும் மறு ஆய்வு செய்யப்படும்.

இதற்கிடையே ஹூபே மாகாண அதிகாரிகள் கூறுகையில், “கடந்த அக்டோபர் 30-ம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் 23 பயணிகள் டெல்லியிலிருந்து வூஹான் நகருக்கு வந்தனர். அதில் 19 பேர் அறிகுறியில்லாத கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 4 பேருக்கு அறிகுறிகளுடன் கரோனா இருந்தது. இதில் ஒரு தம்பதி, அவர்களின் குழந்தையும் அடக்கம்” எனத் தெரிவித்தனர்.

இதன் காரணமாகவே, இந்தியாவில் இருந்து பயணிகள் சீனாவுக்குள் வருவதற்கு தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது சீன அரசு.

மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், “இந்திய அரசு, சீன அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. சீனாவில் இருந்து அத்தியாவசியக் காரணங்களுக்காக இந்தியர்கள் வருவதற்கு அனுமதியளிக்கப் பேசி வருகிறது.

சீன அரசுத் தரப்பில் விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடை என்பது தற்காலிகமானதுதான், சரியான சூழல் வரும்போது இந்தத் தடைகள் நீக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இதன்படி ஏற்கெனவே சீனா சார்பில் விசா வழங்கப்பட்டிருந்தாலும் அது ரத்து செய்யப்படும். அதேசமயம், விசா கோரி விண்ணப்பம் செய்பவர்களுக்குத் தடையில்லை.

இது இந்தியாவுக்கு மட்டும் எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல. பல்வேறு நாடுகளுக்கும் இந்தத் தடையை சீனா விதித்துள்ளது. உலக அளவில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. பனிக்காலத்தில் கரோனா தாக்கம் அதிகமாக இருக்கும். தங்கள் நாட்டில் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சீனா எடுத்துள்ளது.

அதேசமயம், சீனாவுக்கு அவசர வேலையாக, அத்தியாவசியமாகச் செல்லும் இந்தியர்களுக்கு மனிதநேய அடிப்படையில் விசா வழங்கப்படும். நவம்பர் 3-ம் தேதிக்குப் பின் விசா வழங்கப்பட்டிருந்தால் அவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது” எனத் தெரிவிக்கின்றன.

சீன அரசு எடுத்த கடும் நடவடிக்கை காரணமாகவே, சீனாவின் உள்நாட்டின் பல மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலம் கரோனா வைரஸ் பரவும் அச்சம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து, இந்த நடவடிக்கையை சீன அரசு எடுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x