Published : 06 Nov 2020 12:28 PM
Last Updated : 06 Nov 2020 12:28 PM

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு ஒரு கோடியை நெருங்கியது: தொடர்ந்து 3 நாளாக ஒரு லட்சத்துக்கும் மேல் பாதிப்பு

அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏறக்குறைய ஒரு கோடியை எட்ட உள்ளது. அங்கு தொடர்ந்து 3-வது நாளாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ், சீனாவில் பாதிப்பை ஏற்படுத்தியதைவிட, அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல்கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2-வது கட்ட அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது

அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் கடும் அச்சத்தையும், பீதியையும் உருவாக்கியுள்ளது. மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் இருப்பதாலும், முகக்கவசம் அணியாமல் சுற்றுவதாலும் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த 3 நாட்களாக அமெரிக்காவில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்து வருகிறது. கரோனா பாதிப்பு திடீர் அதிகரிப்பு அமெரிக்காவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. நோயாளிகளின் வருகை அதிகரித்து வருவதால், அவர்களைச் சமாளிக்க முடியாத சூழலை உருவாக்கியுள்ளது.

இதன் காரணமாக நவம்பர் 26-ம் தேதி நன்றி செலுத்தும் நாள் (தேங்ஸ் கிவிங்டே) கொண்டாட்டத்தைத் தள்ளி வைக்கவும் பல்வேறு குடும்பத்தினரைச் சிந்திக்க வைத்துள்ளது. மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 20 மாகாணங்களில் கரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

இல்லினாய்ஸ், டெக்சாஸ் மாகாணத்தில் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டது. இது தவிர நெப்ரஸ்கா, இன்டியானா, ஐயோவா, மின்னசோட்டோ, மிசவுரி, நார்த் டகோடா, ஒஹியோ, விஸ்கான்சின், அர்கானோஸ், கொலராடோ, மைனி, கென்டகி, ஓரிகன், நியூ ஹெமிஸ்பயர், ஒக்லஹோமா, ஹோட் ஐலாந்து, உத்தா, வெஸ்ட் விர்ஜினியா ஆகிய மாகாணங்களில் புதிதாக கரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த திடீர் அதிகரிப்பு காரணமாக பல்வேறு மாகாண அரசுகள் மக்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பொது இடங்களில் மக்கள் கூடும் எண்ணிக்கையையும் குறைத்துள்ளன. அமெரிக்க மருத்துவமனைகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் புதிதாக ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 204 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,125 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக உயிரிழப்பு ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தப் பாதிப்பு 99 லட்சத்து 19 ஆயிரத்து 522 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு 2 லட்சத்து 40 ஆயிரத்து 953 ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x