அமெரிக்காவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருக்கிறோம்: பாகிஸ்தான்

அமெரிக்காவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருக்கிறோம்: பாகிஸ்தான்
Updated on
1 min read

பைடன் அல்லது ட்ரம்ப் ஆகிய இருவரில் யார் அமெரிக்க அதிபராக ஆட்சிக்கு வந்தாலும் இணைந்து செயல்பட பாகிஸ்தான் ஆர்வமாக உள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம். அமெரிக்கத் தேர்தல் தொடர்பாக அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பாகிஸ்தான் முக்கிய வர்த்தகம் வைத்துள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் அமெரிக்க அதிபராக பதவியேற்கத் தேவையான 270 தேர்தல் சபை வாக்குகளை நோக்கி ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் முன்னேறி வருகிறார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை ஜோ பைடன் 253 தேர்தல் சபை வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். ட்ரம்ப் 214 தேர்தல் சபை வாக்குகளுடன் தேங்கியுள்ளார். விஸ்கான்சின், மிச்சிகன் மாகாணங்களிலும் ஜோ பைடன் வென்றுள்ளார்.

இன்னும் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த இறுதிக்கட்ட முடிவுகள் வெளியாகவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in