பாலி தீவில் கல்லூரி கட்டணமாக தேங்காய், கீரை கொடுக்கலாம்

பாலி தீவில் கல்லூரி கட்டணமாக தேங்காய், கீரை கொடுக்கலாம்
Updated on
1 min read

பாலி கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், கல்விக் கட்டணமாக பணத்துக்குப் பதில் தேங்காய் கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. வருவாய் இல்லாமல் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். பள்ளி, கல்லூரிகள், சுற்றுலா தலங்கள் எல்லாம் கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டன.

சில நாடுகளில் சில பகுதிகள் மட்டும் மீண்டும் திறந்துள்ளன. எனினும் கரோனா பாதிப்பு முழுக்க முழுக்க சுற்றுலாவை மட்டுமே நம்பியுள்ள பாலி தீவில் கடுமையாக எதிரொலித்தது. இந்தோனேசியாவின் அழகிய பாலி தீவில் வருவாய் இன்று மக்கள் தவிப்பதால், விருந்தோம்பல் கல்லூரி ஒன்று மாணவர்களின் கல்வி கட்டணத்தை மாற்று வழியில் செலுத்த அறிவித்துள்ளது.

அதன்படி, கல்வி கட்டணமாக பணத்துக்குப் பதில் தேங்காய் கொடுக்கலாம். மாணவர்களிடம் இருந்து கட்டணமாகப் பெறப்படும் தேங்காய்கள் மூலம் எண்ணெய் தயாரிக்க கல்லூரி திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ‘தி பாலி சன்’ பத்திரிகையில் வெளியிட்ட செய்தியில், ‘‘பாலியின் டெகலாலாங் பகுதியில் வீனஸ் ஒன் டூரிஸம் அகடமி என்ற கல்லூரி செயல்படுகிறது. இங்குப் படிக்கும் மாணவர்கள், கல்வி கட்டணத்தைப் பணமாக இல்லாமல், தேங்காய்களாக கொடுக்கலாம் என்று அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மாணவர்களின் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது’’ என்று பாராட்டி உள்ளது.

இதுகுறித்து அகடமி இயக்குநர் வயான் பசெக் அதிபுத்ரா கூறும்போது, ‘‘மாணவர்கள் அளிக்கும் தேங்காய்களில் தேங்காய் எண்ணெய் தயாரிப்போம். மேலும் முருங்கை இலை உட்பட மூலிகை இலைகளும் கட்டணமாகப் பெறப்படும் என்று அறிவித்துள்ளோம். இவற்றின் மூலம் மூலிகை சோப் உட்பட சில பொருட்களைத் தயாரித்து விற்போம். அதில் கிடைக்கும் பணத்தை வைத்து கல்லூரி நிர்வாகத்தை நடத்துவோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in