Published : 05 Nov 2020 03:12 AM
Last Updated : 05 Nov 2020 03:12 AM

அமெரிக்க தேர்தலில் பிரதிநிதிகள் அவைக்கு 4 இந்திய அமெரிக்கர்கள் மீண்டும் தேர்வு

அமெரிக்க பிரதிநிதிகள் அவைக்கு 4 இந்திய அமெரிக்கர்கள் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று முன்தினம் அதிபர், துணை அதிபர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று காலை முதல் ஒவ்வொரு மாகாணத்தின் முடிவுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

அமெரிக்காவில் காங்கிரஸ் சபை என்பது அமெரிக்காவின் நாடாளுமன்ற அவை ஆகும். இதில் இரண்டு அவைகள் உள்ளன. ஒன்று செனட் அவை (மேலவை). மற்றொன்று பிரதிநிதிகள் அவை என்று அழைக்கப்படுகிறது. இங்கு மொத்தம் 535 உறுப்பினர்கள் உள்ளனர். செனட் சபையில் 100 உறுப்பினர்கள் உள்ளனர். அதேபோல் பிரதிநிதிகள் சபையில் 435 பிரநிதிகள் உள்ளனர்.

இந்த அவையில் எந்த கட்சி எவ்வளவு உறுப்பினர்களை வெல்கிறது என்பதை பொறுத்தே புதிய சட்டங்களை இயற்ற முடியும். அதாவது புதிய சட்டங்களை அதிபர் இயற்ற வேண்டும் என்றால் இந்த செனட் மற்றும் பிரநிதிகள் சபையில் மெஜாரிட்டி இருக்க வேண்டும்.

இதனால் இங்கு அதிக இடங்களில் வெற்றி பெறுவது அவசியம். காங்கிரஸ் அவையில் பிரதிநிதிகளை 2 வருடங்களுக்கு ஒருமுறையும், செனடர்களை 6 வருடங்களுக்கு ஒரு முறையும் தேர்வு செய்வார்கள். ஒவ்வொரு மாகாணத்துக்கும் 2 செனட்டர்கள் வீதம் 100 செனட்டர்கள் உள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு மாகாணத்துக்கும் பிரதிநிதிகள் எண்ணிக்கை மாறுபடும்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் அமெரிக்க பிரதிநிதிகள் அவைக்கு கடந்த முறை தேர்வு செய்யப்பட்டிருந்த ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த டாக்டர் அமி பேரா, பிரமிளா ஜெயப்பால், ரோ கன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 இந்திய அமெரிக்கர்கள் மீண்டும் போட்டியிட்டனர். அவர்கள் 4 பேரும் மீண்டும் பிரதிநிதிகள் அவைக்குத் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

ராஜா கிருஷ்ணமூர்த்தி (47), 71 சதவீத வாக்குகளைப் பெற்று பிரஸ்டன் நெல்சனை (சுதந்திரா கட்சி) வீழ்த்தினார். ரோ கன்னா (44), இந்திய அமெரிக்கரான ரிதேஷ் டாண்டனை (குடியரசு கட்சி) வெற்றி கொண்டார். டாக்டர் அமி பேரா (55), 5-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளரான பஸ் பேட்டர்சனை வீழ்த்தினார்.

சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட பிரமிளா ஜெயப்பால் 70 சதவீத வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் கிரெய்க் கெல்லரைத் தோற்கடித்தார்.

இந்திய அமெரிக்கர்களான பிரஸ்டன் குல்கர்னி, மங்கா அனந்தமுல்லா, நிஷா சர்மா ஆகியோர் தோல்வி கண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x