

அமெரிக்க அதிபராக யார் வருகிறார்கள் என்பது முக்கியமல்ல என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரான் தேசியத் தொலைக்காட்சியில் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறும்போது, “அமெரிக்க அதிபராக யார் வருகிறார்கள் என்பது முக்கியமல்ல. வருங்காலத்தில் தம் நாடு எதிர்கொள்ளவிருக்கும் கடினமான சூழலை எவ்வாறு சமாளிப்பது என்பதைத் திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஈரான் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமெனி, “அமெரிக்காவுடனான எங்கள் கொள்கை எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். எந்த தனிப்பட்ட நபரைச் சார்ந்தும் மாறாது. அமெரிக்க அதிபராக யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்பது முக்கியம் அல்ல’’ என்று தெரிவித்திருந்தார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த 4 வருடங்களாக ஈரானுடன் கடுமையான மோதல் போக்கைக் கடைப்பிடித்தார். அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார். மேலும், தொடர்ச்சியாக ஈரானின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தார். இதன் காரணமாக ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் அதிகரித்தது.
இந்த நிலையில் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபரானால் ஈரானின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.