

காபூல் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் துணை செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் கூறும்போது, “காபூல் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தீவிரதாதத் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறோம். காபூல் பல்கலைக்கழகம் 10 நாட்களுக்குள் மீண்டும் தீவிரவாதத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது” என்றார்.
தீவிரவாதிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் துணை இருப்போம் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள காபூல் பல்கலைக்கழகத்தில் கடந்த திங்கட்கிழமை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் மாணவர்கள் உட்பட 19 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலை மூன்று தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என்று தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதலை ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தி இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
எனினும் இத்தீவிரவாதத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் கானாபாத் மாவட்டத்தில் இன்று நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் பலியாகினர்.