Last Updated : 04 Nov, 2020 02:01 PM

 

Published : 04 Nov 2020 02:01 PM
Last Updated : 04 Nov 2020 02:01 PM

இழுபறி நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ட்ரம்ப், பைடன் இடையே கடும் போட்டி

நெருக்கமான, யார் வெற்றி பெறுவார் என்று உறுதியாகக் கூற முடியாத இறுக்கமான தேர்தல் பந்தயமாக அமைந்த அமெரிக்க தேர்தல் தற்போது நிச்சயமின்மைக் கட்டத்துக்கு வந்துள்ளது.

ஜோ பைடனும், ட்ரம்பும் முக்கிய போர்க்களத்தில் கைகளை குறுக்காகக்கட்டிக் கொண்டு வாக்கு எண்ணிக்கையை கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

புளோரிடா பின்னடைவிலிருந்து மீண்ட ஜோ பைடன் அரிசோனா, மெய்னியில் வெற்றி பெற்றுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை ஓட்டுகளில் 270 ஓட்டுகளை பெறுபவரே ஜனாதிபதி ஆக முடியும். கலிபோர்னியாவில் 55, டெக்சாஸில் 38, நியூயார்க் மற்றும் புளோரிடாவில் தலா 29, பென்சில்வேனியாவிலும், இல்லினாய்சிலும் தலா 20, ஓஹியோவில் 18, ஜார்ஜியாவிலும், மிச்சிகனிலும் தலா 16, வட கரோலினாவில் 15 வாக்குகள் உள்ளன. இந்த மாகாணங்கள், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும்.

இதில் ஜனநாயக அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் 220 தேர்தல் சபை வாக்குகளையும், அதிபர் ட்ரம்ப் 213 வாக்குகளையும் பெற்றுள்ளனர். முதலில் மிகவும்பின் தங்கியிருந்த ட்ரம்ப் மெல்ல மெல்ல ஜோ பைடனுக்கு நெருக்கமாக வந்து நெருக்கடி கொடுத்து வருகிறார்.

ஆனால் ஃபாக்ஸ் நியூஸ் செய்திகளின்படி பைடன் 238 வாக்குகளுடனும் ட்ரம்ப் 213 வாக்குகளுடனும் உள்ளனர். சிஎன்என் 213 பைடன் என்றும், ட்ரம்ப் 213 என்றும் கூறுகிறது.

தி நியூயார்க் டைம்ஸ் ஊடகம் ஜோ பைடன் 224 வாக்குகளுடன் முன்னிலை என்றும் ட்ரம்ப் 213 என்றும் கூறுகிறது. 270 வாக்குகள் எடுப்பவர்களே அதிபர் ஆக முடியும்.

பென்சில்வேனியா முக்கியமான மாகாணம் இங்கு உள்ளூர் நேரம் காலை 9 மணிக்குத்தான் முடிவு தெரியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் முடிவுகள் யார் பக்கம் என்பது பற்றிய உறுதியான முடிவுகளுக்கு மேலும் ஒருநாள் காத்திருக்க வேண்டி வரும் என்று தெரிகிறது.

பென்சில்வேனியா மாநிலத்தில் 20 இடங்கள் அதிபர் வேட்பாளரை தீர்மானிப்பதாகும்.

மிச்சிகன், விஸ்கான்சின், நார்த் கரோலினா, ஜார்ஜியா, நெவாதா போன்ற முக்கிய இடங்களிலும் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

யார் அதிபர் என்று தெரிந்து கொண்டு படுக்கச் செல்லலாம் என்று எதிர்பார்க்கும் அமெரிக்கர்கள் நிச்சயம் இன்னும் ஒருநாள் கூடுதலாகக் காத்திருப்பது தவிர வேறு வழியில்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் தான் வென்ற பல மாநிலங்களை ட்ரம்ப் தக்கவைத்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது. ஜனநாயகக் கட்சியினருக்கு செனட் சபை சீட் ஒன்று கொலராடோவில் கிடைத்துள்ளது, ஆனால் அலபாமாவில் தோல்வி கண்டுள்ளது.

ஜோ பைடன் நியூஜெர்சி, நியூயார்க் மாநிலங்களில் வென்றுள்ளார், இங்கும் ட்ரம்ப் கடும் சவால்களை அளித்தார்.

நியூயார்க்கில் பைடன் 22 லட்சம் வாக்குகளைப் பெற ட்ரம்ப் 12 லட்சம் வாக்குகளையே பெற்றார்.

ஜனநாயகக் கட்சி ஆதரவு மாநிலங்களான கொலொராடோ, கனெக்டிகட், டெலாவர், இல்லினாய்ச், மசாச்சூசெட்ஸ்,, நியு மெக்சிகோ, வெர்மோந்த், வர்ஜினியா ஆகிய மாநிலங்களை ஜோ பைடன் வென்றார்.

அதிபர் ட்ரம்ப் கடைசியாக எந்த வித அடிப்படையும் இல்லாமல் மோசடி நடந்ததாகக் கூறி ‘தான் ஏற்கெனவே வெற்றிப் பெற்றதாக’ கூறிக்கொண்டிருக்கிறார் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x