

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார், ஆனால் அதிபர் ட்ரம்பும் மிகவும் பின் தங்கி விடவில்லை, அவரும் கடும் சவால் அளிப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில் மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை ஓட்டுகளில் 270 ஓட்டுகளை பெறுபவரே ஜனாதிபதி ஆக முடியும். ஃபாக்ஸ் நியூஸ் தகவல்களின் படி 538 தேர்தல் சபை ஓட்டுக்களில் பைடன் 207 ட்ரம்ப் 148 என்று கூறுகிறது. மாறாக சிஎன்என் தொலைக்காட்சி 192 வாக்குகள் பைடன் என்றும் ட்ரம்புக்கு 108 வாக்குகள் என்றும் கூறுகிறது.
தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை பைடன் 133 தேர்தல் சபை ஓட்டுகளையும் ட்ரம்ப் 115 தேர்தல் சபை ஓட்டுக்களையும் பெற்றதாக தெரிவித்துள்ளது.
ஆனால் முக்கிய போட்டி இடங்களில் ட்ரம்ப் முன்னிலை வகிப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. புளோரிடா, நார்த் கரோலினா, ஓஹையோ, பென்சில்வேனியா, விஸ்கான்சின், மிச்சிகன் ஆகிய இடங்களில் ட்ரம்பும் அரிசோனா, மினியாபோலீஸ் ஆகிய இடங்களில் பைடன் முன்னிலை வகிப்பதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வர்ஜினியாவில் ட்ரம்ப் 7% புள்ளிகள் முன்னிலை வகிக்கிறார், இது ஜனநாயகக் கட்சியின் கோட்டையாகக் கருதப்படுவது.
இப்போதைய நிலவரப்படி பைடன் வெற்றி பெற்றாலும் பெரிய இடைவெளியில் வெற்றி பெற மாட்டார் என்று அமெரிக்க கணிப்புகள் கூறுகின்றன.
அதிபர் மாளிகையில் அமர்ந்து கொண்டு தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சியில் பார்த்து வரும் ட்ரம்ப், “நாடு முழுதும் நம் கட்சி நல்ல நிலையில் உள்ளது, நன்றி” என்று ட்வீட் செய்துள்ளார்.
நிபுணர்கள் கருத்துகளின் படி நார்த் கரோலினா, ஒஹையோ, பென்சில்வேனியா ஆகிய 3 மாகாணங்களிலும் ட்ரம்ப் வெற்றி பெற வேண்டிய நிலை உள்ளது, மாறாக ஜோ பைடன் இதில்ல் ஒரு மாகாணத்தை வென்றாலும் அதிபராகி விடுவார் என்கின்றனர்.