அமெரிக்காவுக்கு யார் அதிபராக வந்தாலும் எங்களுக்கு ஒரே கொள்கைதான்: ஈரான்

அமெரிக்காவுக்கு யார் அதிபராக வந்தாலும் எங்களுக்கு ஒரே கொள்கைதான்: ஈரான்
Updated on
1 min read

அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் ஈரானின் கொள்கை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்று ஈரான் மூத்த மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அயத்துல்லா அலி காமெனி கூறும்போது, “அமெரிக்காவுடனான எங்கள் கொள்கை எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். எந்த தனிப்பட்ட நபரைச் சார்ந்தும் மாறாது. அமெரிக்க அதிபராக யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்பது முக்கியம் அல்ல” என்று தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த 4 வருடங்களாக ஈரானுடன் கடுமையான மோதல் போக்கைக் கடைப்பிடித்தார். அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார். மேலும், தொடர்ச்சியாக ஈரானின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தார். இதன் காரணமாக ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் அதிகரித்தது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் (செவ்வாய்க்கிழமை) நேரடி வாக்குப்பதிவுகள் நடைபெறும் நிலையில், தேர்தலுக்கு முன்னரே 9 கோடிக்கும் அதிகமானவர்கள் முன் வாக்குப்பதிவு முறையைப் பயன்படுத்தி வாக்களித்துள்ளனர். மேலும், தபால் ஓட்டுகள் மூலமாகவும் மக்கள் தங்கள் வாக்கைச் செலுத்தியுள்ளனர் என்று புளோரிடா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இன்று மட்டும் 6 கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்களிப்பார்கள் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in