

அமெரிக்காவில் 9 கோடிக்கும் அதிகமானவர்கள் முன்கூட்டியே தங்கள் வாக்கைச் செலுத்திய நிலையில் இன்று நேரடி வாக்குப்பதிவு நடக்கிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.
அமெரிக்காவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நேரடி வாக்குப்பதிவுகள் நடைபெறும் நிலையில் தேர்தலுக்கு முன்னரே 9 கோடிக்கும் அதிகமானவர்கள் முன் வாக்குப்பதிவு முறையைப் பயன்படுத்தி வாக்களித்துள்ளனர். மேலும், தபால் ஓட்டுகள் மூலமாகவும் மக்கள் தங்கள் வாக்கைச் செலுத்தியுள்ளனர் என்று புளோரிடா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று மட்டும் 6 கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்களிப்பார்கள் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முக்கிய மாகாணங்களான புளோரிடா, பென்சில்வேனியா, அரிசோனா, விஸ்கான்சின் ஆகியவற்றில் ஜோ பிடனுக்கே அமோக ஆதரவு இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், நியூயார்க் டைம்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பிலும் ஜோ பிடன் முன்னிலை பெற்றுள்ளார்.
எழுபத்தேழு வயதாகும் ஜோ பிடன் வெற்றி பெற்றால் அதிபர் தேர்தலில் முதன்முறையாக வெற்றி பெற்ற மிக மூத்த வேட்பாளர் என்றும், எழுபத்து நான்கு வயதாகும் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றால் அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற மிக மூத்த வேட்பாளர் என்றும் சரித்திரம் படைக்கலாம்.