

ஆப்கானிஸ்தான் பல்கலைகழகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 பேர் பலியாகினர். 22 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தரப்பில், “ ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள காபூல் பல்கலைகழகத்தில் தீவிரவாதிகள் இன்று (திங்கட்கிழமை) தீவிரவாத தாக்குதல் நடத்தினர். இதில் மாணவர்கள் உட்பட 19 பேர் பலியாகினர்.
பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை மூன்று தீவிரவாதிகள் நடத்தி உள்ளனர். இதில் ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு தங்களுக்கும் எந்த தொடர்ப்பும் இல்லை என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
தலிபான்களை தவிர்த்து ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
ஆப்கன் பாதுகாப்புப் படையினர் மற்றும் தலிபான்களுக்கு இடையே சில நாட்களாகவே மோதல் நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் ஆப்கன் பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர். இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் வன்முறை அதிகரித்து வருகிறது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், ஆப்கன் அரசு தலிபான்களை அவ்வப்போது விடுவித்து வருகிறது. மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர அவர்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்துள்ளனர்.