

துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து துருக்கி தேசியப் பேரிடர் மேலாண்மை தரப்பில், “துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது. 900க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இதில் 700 பேர் வரை குணமடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்மிர் நகரில் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதிகளில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
முன்னதாக, துருக்கியில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆகப் பதிவானது.
ஏஜியன் கடலை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 16.5 கிலோ மீட்டர் ஆகும். துருக்கியின் இஸ்மிர் நகரில் நிலநடுக்கம் காரணமாக பல்வேறு கட்டிடங்கள் சரிந்துள்ளன. இந்த நிலையில் இஸ்மிர் நகரில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அலையும் தாக்கின.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாயின. கார்கள் உட்பட பல பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டன.
துருக்கி மட்டுமல்லாது கீரிஸிலும் நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன. அங்கும் 20க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து முற்றிலும் சேதமடைந்தன.