இங்கிலாந்தில் மீண்டும் லாக்டவுன்: கரோனா தொற்று 10 லட்சத்தைக் கடந்ததால் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அறிவிப்பு

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் :  படம் உதவி ட்விட்டர்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் : படம் உதவி ட்விட்டர்
Updated on
2 min read

இங்கிலாந்தில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததையடுத்து, மீண்டும் ஊரடங்கை பிரதமர் போரிஸ் ஜான்ஸன் நேற்று நள்ளிரவு அறிவித்தார்.

இந்த ஊரடங்கு உத்தரவு நவம்பர் 5-ம் தேதிமுதல் டிசம்பர் 2-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் கடந்த சில வாரங்களாக கரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வந்தது, உயிரிழப்பும் நூற்றுக்கணக்கில் உயர்ந்தது. இதையடுத்து, பிரிட்டனில் மீண்டும் கரோனா வைரஸ் 2-வது அலை உருவாகும் சூழல் ஏற்பட்டது.

பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கரோனாவில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர், 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்தப் பாதிப்பு 10 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதையடுத்து பிரிட்டன் அரசுக்கு ஆலோசனை தெரிவித்த தொற்றுநோய் தடுப்பு வல்லுநர்கள் குழுவினர், ‘‘தவறான பாதையில் செல்கிறோம் உடனடியாக கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தாவிட்டால், 2-வது கட்ட அலையால் பாதிக்கப்பட நேரிடும், மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

அடுத்து பண்டிைகக் காலம் வரும்போது மக்கள் கூட்டமாகச் சேர்வதற்கு வாய்ப்புள்ளது. அப்போது கரோனா தொற்று அதிகரிக்கக்கூடும்’’ என எச்சரித்தனர்.

இதையடுத்து, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் நேற்று திடீரென அமைச்சர்களுடன், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, நள்ளிரவில் லாக்டவுனை அறிவித்தார். இதன்படி, 5-ம் தேதி முதல் நடைமுறைக்குவரும் லாக்டவுன் டிசம்பர் 2-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைமுறையில் இருக்கும்.

மக்கள் வீட்டை விட்டு அத்தியாவசிய தேவைக்களுக்கு மட்டுமே வெளிேய செல்லலாம். குறிப்பாக பள்ளி, கல்லூரிகள், பணி, உடற்பயிற்சி, மருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே செல்லலாம். ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை, பார்சல் வாங்க மட்டுமே அனுமதி உண்டு.

பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வழக்கம் போல் திறந்திருக்கும். பப், ரெஸ்டாரன்ட்கள் மூடப்படும். அத்தியாவசியமற்ற அனைத்து இடங்களும் மூடப்படும்.

இந்த புதிய ஊரடங்கு உத்தரவால் வேலையிழப்பால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஊதியத்தில் 80 சதவீதம் மானியமாக வழங்கப்படும் என பிரிட்டன் அரசுஅறிவித்தது.

ஜெர்மனி, பிரான்ஸில் மீண்டும் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதையடுத்து அந்நாடு அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதுவரை பிரிட்டனில் கரோனாவி்ல் மட்டும் 46,555 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கரோனாவில் அதிகமான உயிரிழப்புகளைச் சந்தித்த நாடுகளில் 5-வது இடத்தில் பிரிட்டன் இருக்கிறது. அமெரிக்கா, பிரேசில், இந்தியா, மெக்ஸிக்கோ நாடுகள் 4 இடங்களில் உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in