

எதிர்பார்த்தபடி ரசிகர்கள் கூட்டம் வராததால் மலேசியாவில் நவம்பர் மாதம் முதல் மீண்டும் திரையரங்குகளை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுக்க உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் நிலவுகின்றன. திரையரங்குகள், மால்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள் பல மாதங்கள் மூடப்பட்டிருந்தன. ஒருசில நாடுகளில் மட்டும் பல கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதில் மலேசியாவும் ஒரு நாடு.
திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் கரோனா அச்சம் காரணமாக மக்கள் யாரும் திரையரங்குக்கு வரத் தயாராக இல்லை. மிகக் குறைந்த அளவு ரசிகர்களே திரையரங்குக்கு வருகின்றனர். மலேசியா மட்டுமல்லாமல் திரையரங்குகள் திறக்கப்பட்ட மற்ற நாடுகளிலும் இதே நிலைதான். மேலும், தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை மக்கள் தைரியமாகப் பொது இடங்களுக்கு வருவதற்குச் சாத்தியமில்லை என்பதால் திரைப்படத் தயாரிப்பாளர்களும் புதிய படங்களை வெளியிடத் தயக்கம் காட்டி வருகின்றனர்.
கண்டிப்பாகப் பெரிய திரையில் மட்டுமே பார்க்க வேண்டும், எப்படியும் ரசிகர்களை மீண்டும் திரையரங்குக்கு வரவழைக்க முடியும் என்று பெரிதும் நம்பப்பட்ட கிறிஸ்டோஃபர் நோலனின் 'டெனட்' திரைப்படமும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்பதால் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் மத்தியில் புதிய படங்களை வெளியிடத் தயக்கம் இருந்து வருகிறது.
ஜூலை மாதம் மலேசியாவில் திரையரங்குகள் திறக்கப்பட்டன. ஆனால், இந்த மூன்று மாதங்களில் திரையரங்குகள் கடுமையான நஷ்டத்தைச் சந்தித்துள்ளன. புதிய படங்கள் இல்லாமல் ரசிகர்களைத் திரையரங்குகளுக்கு வரவழைப்பது கடினம். எனவே, இப்போதைக்குத் திரையரங்குகளை மூடுகிறோம் என மலேசியத் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
வெறும் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும், ஒவ்வொரு காட்சிக்கும் கிருமிநாசினி வைத்துச் சுத்தம் செய்ய வேண்டும் எனப் பலவிதமான கட்டுப்பாடுகளைப் பின்பற்றியே திரையரங்குகள் இயங்கி வந்தன. ஆனால், அடிப்படைச் செலவுக்கான பணம் கூட வருமானத்தில் வரவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அடிக்கடி இப்படித் திரையரங்குகளைத் திறந்து மூடுவது என்பதும் அதிகச் செலவு பிடிக்கும் வேலை என்றும் உரிமையாளர்கள் யோசிக்கின்றனர்.
அரசாங்கத்திடமும் சில சலுகைகள் வேண்டுமெனக் கேட்டிருக்கும் உரிமையாளர்கள், தொடர்ந்து கோவிட்-19 சூழலைக் கண்காணித்து அதற்கேற்றவாறு முடிவெடுப்போம் என்று அறிவித்துள்ளனர். இன்னொரு பக்கம் ஐரோப்பாவில் கரோனா தொற்று மிக வேகமாகப் பரவுவதால் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் மீண்டும் திரையரங்குகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.