தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க ராஜபக்சே உத்தரவு

தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க ராஜபக்சே உத்தரவு
Updated on
1 min read

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதன் எதிரொலியாக, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய, அந்நாட்டு அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளையில், இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்படும் தமிழக மீனவர்களின் எண்ணிக்கை துல்லியமாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக, இலங்கை அதிபரின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட செய்தியில், நரேந்திர மோடியின் பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, அதிபர் ராஜபக்சே புது டெல்லி பயணம் மேற்கொள்வதாகவும், அதையொட்டி இந்திய மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக விடுதலை செய்ய ராஜபக்சே உத்தரவிடுவது இது இரண்டாவது முறையாகும்.

முன்னதாக, ஜெனீவாவில் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் நடந்த இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காததன் விளைவாக, தமிழக மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுடன் இலங்கை இணக்கமான உறவைக் கொண்டிருந்தது போலவே, மோடி தலைமையிலான அரசுடன் நல்லுறவைப் பேணுவதற்காக ராஜபக்சே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் போராட்டத்தில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in