பிரான்ஸ் தேவாலயத்தில் தீவிரவாதத் தாக்குதல்: 3 பேர் பலி

பிரான்ஸ் தேவாலயத்தில் தீவிரவாதத் தாக்குதல்: 3 பேர் பலி
Updated on
1 min read

பிரான்ஸில் உள்ள தேவாலயத்தில் கத்தியால் ஒருவர் குத்தியதில் 3 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து பிரான்ஸ் ஊடகங்கள் தரப்பில், “பிரான்ஸில் உள்ள நைஸ் நகரின் தேவாலயத்தில் இன்று கையில் கத்தியுடன் நுழைந்த நபர் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினார். இதில் 3 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். அவர் தொடர்ந்து கடவுளே சிறந்தவர் என்று கூறிக்கொண்டு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்” என்று தகவல் வெளியானது.

தாக்குதல் நடத்திய நபர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளார் என்றும் பிரான்ஸ் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

முன்னதாக, நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன்களை மாணவர்களிடத்தில் காட்டி, ‘பேச்சு, கருத்து சுதந்திரம்’ பற்றி வகுப்பறையில் விவாதத்தை நடத்திய பிரெஞ்சு வரலாற்று ஆசிரியரின் தலை பள்ளிக்கு வெளியே பத்து நாட்களுக்கு முன்னர் துண்டிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் பிரான்ஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் அன்றே போலீஸாரால் கொல்லப்பட்டார். அவர் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடையவர் என்றும் கூறப்பட்டது. மேலும், இந்தக் கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், “இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல்” என்று திங்கட்கிழமை கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

இந்த நிலையில் மக்ரோன் மற்றும் பிரான்ஸ் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் பல நாடுகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இச்சூழலில் பிரான்ஸில் உள்ள தேவலாயத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in