Last Updated : 29 Oct, 2020 07:24 PM

 

Published : 29 Oct 2020 07:24 PM
Last Updated : 29 Oct 2020 07:24 PM

40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடித் தொடர்பு: ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அமைச்சர்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் சவுத்ரி : படம் உதவி | ட்விட்டர்.

இஸ்லாமாபாத்

ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதியால் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதில் பாகிஸ்தானுக்கு நேரடித் தொடர்பு உள்ளது என்று அந்நாட்டு அமைச்சர் நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு, பிப்ரவரி 14-ம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்திலிருந்து அவந்திபூருக்கு, சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் வாகனத்தில் சென்றனர். அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் லெத்திபோரா எனும் பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் வாகனம் வந்தபோது, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி ஒருவர், வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தினார்.

இந்தத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குலுக்குக் காரணம் பாகிஸ்தானும், பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பும்தான் என மத்திய அரசு குற்றம் சாட்டியது. ஆனால், அதை அப்போது பாகிஸ்தான் மறுத்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் சவுத்ரி இன்று விவாதம் ஒன்றில் பேசும்போது, புல்வாமா தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினோம் என்று ஒப்புக்கொண்டார்.

அமைச்சர் பவாத் சவுத்ரி பேசுகையில், “இந்தியாவை அவர்களின் நாட்டிலே சென்று தாக்கினோம். புல்வாமா தாக்குதல் நமக்கான வெற்றி. இம்ரான்கான் தலைமையில் பாகிஸ்தானுக்கான வெற்றி. இந்த வெற்றிகரமான தாக்குதலுக்கு நீங்களும், நாங்களும்தான் காரணம்” எனத் தெரிவித்தார்.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பலுசிஸ்தானில் தீவிரவாத முகாம்களை அழித்துத் திரும்பியது. அப்போது, பாகிஸ்தான் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய இந்திய விமானப் படைவீரர் அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி கைது செய்யப்பட்ட அபிநந்தன், இரு நாடுகளுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் மார்ச் 1-ம் தேதி விடுவிக்கப்பட்டார்.

இது தொடர்பாக, பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் சர்தார் அர்யாஸ் சித்திக் நேற்று ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், “அபிநந்தனை விடுவிப்பது தொடர்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டம் நடந்தது. அப்போது பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, அபிநந்தனை ராணுவம் விடுவிக்காவிட்டால், இன்று இரவு 9 மணிக்கே இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் என்றார்.

இதைக் கேட்டவுடன் ராணுவத் தளபதி ஜெனரல் பஜ்வாவின் கால்கள் நடுங்கின. முகம் வியர்த்துக் கொட்டியது” எனத் தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் சர்தார் அர்யாஸ் சித்திக் பேசிய அடுத்தநாள் புல்வாமா தாக்குதலுக்குப் பாகிஸ்தான் காரணம் என அந்நாட்டு அமைச்சர் பவாத் சவுத்ரி ஒப்புக்கொண்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x