Last Updated : 29 Oct, 2020 02:14 PM

 

Published : 29 Oct 2020 02:14 PM
Last Updated : 29 Oct 2020 02:14 PM

அபிநந்தனை விடுவிக்காவிட்டால் இந்திய ராணுவம் போர் தொடுக்கும் என்று கூறியவுடன் பாக். ராணுவத் தளபதிக்கு கால்கள் நடுங்கிவிட்டன: பாக். எதிர்க்கட்சித் தலைவர் பேட்டி

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் : கோப்புப்படம்

இஸ்லமாபாத்

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை விடுவிக்காவிட்டால் இன்று இரவு 9 மணிக்கு பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்கத் தயாராகிவிடும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி கூறினார். அதைக் கேட்ட ராணுவத் தளபதி குமர் ஜாவித் பஜ்வாவின் கால்கள் நடுங்கத் தொடங்கின என்று எதிர்க்கட்சித் தலைவர் சர்தார் அர்யாஸ் சித்திக் கடந்தகாலச் சம்பவங்களை நினைவு கூர்ந்துள்ளார்.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் மூத்த தலைவரான சர்தார் அர்யாஸ் சித்திக், நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்தபோது சபாநாயகராகவும், தற்போது இம்ரான்கான் ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்து வருகிறார்.

பாகிஸ்தானில் ஒளிபரப்பாகும் துனியா நியூஸ் சேனலுக்கு சர்தார் அர்யாஸ் சித்திக் அளித்த பேட்டியில், இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் கைது விவகாரத்தைப் பற்றிப் பேசும்போது இதைக் குறிப்பிட்டார்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பினர் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி இந்திய விமானப்படை வீரர்கள் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் முகாம் அமைத்திருந்த ஜெய்ஷ் இ தீவிரவாதிகள் பயிற்சி முகாம்களைத் தாக்கி அழித்துவிட்டுத் திரும்பினர்.

அப்போது, மிக்-21 பைசன் ரக போர் விமானத்தை ஓட்டிய இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் தாயகம் திரும்பியபோது, பாகிஸ்தான் விமானம் இடைமறித்தது. இரு விமானங்களும் வானில் துரத்திச் சென்று சண்டையிட்டதில், பாகிஸ்தான் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய இந்திய வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் விழுந்தார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி அபிநந்தனைக் கைது செய்த பாகிஸ்தான் ராணுவம் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது. அபிநந்தனை விடுவிக்க இந்தியா சார்பில் தூதரகம், வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இறுதியில் மார்ச் 1-ம் தேதி வாகா எல்லை வழியாக அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் நடந்தபோது எல்லையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டது. எல்லையில், தாக்குதல் நடத்தத் தயார் நிலையில் இந்திய ராணுவம் விமானங்களை நிறுத்தி இருந்தது. ஆனால், அபிநந்தனை விடுவித்ததும் அந்த முடிவு பின்வாங்கப்பட்டது.

இந்நிலையில், அபிநந்தனைக் கைது செய்து பாகிஸ்தான் ராணுவம் அழைத்துச் சென்ற பின் அவரை விடுவிக்க இந்திய அரசு சார்பில் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது அபிநந்தனை விடுவிப்பதா, வேண்டாமா என்பது தொடர்பாக பாகிஸ்தான் அரசு சார்பில் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி பேசியதை தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சர்தார் அர்யாஸ் சித்திக், துனியா நியூஸ் சேனலுக்குப் பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது:

''எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து வைத்திருந்தது. அவரை விடுவிக்க இந்திய அரசு கோரி வந்தது. அதுகுறித்து முடிவு எடுக்க நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் இம்ரான்கான் கலந்து கொள்ளவில்லை.

அந்தக் கூட்டத்தில் நான் பங்கேற்றேன். என்னுடன் சேர்ந்து பல்வேறு அமைச்சர்கள், ராணுவத் தளபதி குவாமர் ஜாவித் பஜ்வா, நான், பாகிஸ்தான் மக்கள் கட்சிப் பிரிதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர்.

பாகிஸ்தான் அரசால் கடந்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி விடுவிக்கப்பட்ட அபிநந்தன்.

அந்தக் கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது குரேஷி பேசும்போது, “பாகிஸ்தான் ராணுவம் கைது செய்துள்ள இந்திய வீரர் அபிநந்தனை நாம் விடுவிக்காவிட்டால், இந்தியா நிச்சயம் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும். அதுவும் இன்று இரவு 9 மணிக்கே போர் இந்தியா போர் தொடுக்கும். ஆதலால், பாகிஸ்தான் ராணுவத்தினர் அபிநந்தனை விடுவிப்பது சிறந்தது” என்று தெரிவித்தார்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த ராணுவத் தளபதி ஜாவித் பஜ்வாவின் கால்கள் பயத்தால் நடுங்கின, முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது”.

இவ்வாறு சர்தார் அர்யாஸ் சித்திக் தெரிவித்தார்.

ஆனால், இந்தக் கூட்டம் நடந்த தேதி குறித்தும், நேரம் குறித்தும் சர்தார் அர்யாஸ் சித்திக் தெரிவிக்கவில்லை. எதிர்க்கட்சியினர் இம்ரான்கான் அரசுடன் கருத்து மோதலில் ஈடுபட்டு இருந்தாலும், காஷ்மீர் விவகாரத்திலும், அபிநந்தன் விவகாரத்திலும் இம்ரான்கானுக்குத்தான் ஆதரவாக இருந்தோம்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x