Last Updated : 12 Oct, 2015 06:46 PM

 

Published : 12 Oct 2015 06:46 PM
Last Updated : 12 Oct 2015 06:46 PM

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாக். ராணுவத்தின் கொடூர செயல்: விழிப்புணர்வு ஏற்படுத்த பாரிக்கர் வலியுறுத்தல்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் இழைக்கும் கொடுமைகளைப் பற்றி காஷ்மீர் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

கோவா மாநிலம் பம்போலிம் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பாரிக்கர் பேசியதாவது:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பொதுமக்களை பாகிஸ்தான் ராணுவம் எத்தனை கொடூரமாக நடத்துகிறது என்பது குறித்து காஷ்மீர் மக்களின் கவனத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும். இந்தியாவின் ஒரு பகுதியாக விளங்கும் காஷ்மீர் மக்களின் சகோதரர்கள், சகோதரிகள் எவ்வாறு மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பது பற்றி அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும். அதற்குப் பிறகும் அவர்கள் பாகிஸ்தானைப் பற்றி சிந்திப்பார்களா என எனக்குத் தெரியாது.

பாகிஸ்தானின் பெஷாவரில் கடந்த ஆண்டு தீவிரவாதிகள் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதில் 132 குழந்தைகள் உட்பட 145 பேர் பலியாயானதை நாம் அறிவோம். மசூதிக்கு பிரார்த்தனைக்காக செல்பவர்கள் கொலை செய்யப்படுவதையும் நாம் அறிவோம்.

இதுபோல பாகிஸ்தானில் எங்கு பார்த்தாலும் குறிப்பாக பலுசிஸ்தான், சிந்து ஆகிய மாநிலங்களில் மக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். ‘இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம்’ என்ற விஷ விதையை விதைத்ததற்கு கிடைத்த பலன்கள்தான் இவை என்பதை அவர்கள் உணர வேண்டும்.

இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்வதை திசை திருப்பும் வகையில், எல்லையில் அத்து மீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் வழக்கமாகக் கொண்டுள்ளது. தீவிரவாதத்தை ஊக்குவிப்பதையும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பலுசிஸ்தான் மற்றும் சிந்து ஆகிய மாநிலங்களில், பாகிஸ்தான் ராணுவம் மனித உரிமைகளை மீறும் வகையில் செயல்படுவதையும் சர்வதேச அரங்கத்துக்குக் கொண்டு செல்வதற்கு இதுதான் சரியான தருணம்.

கமிஷன் கிடையாது

ராணுவ தளவாடங்களை வழங்கும் வெளிநாட்டு உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் முகவர்களை பதிவு செய்வதற்கு இந்த மாத இறுதியில் புதிய விதிமுறை செயல்பாட்டுக்கு வரும். இதன்படி, முகவர்களுக்கு கமிஷன் வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டு, குறிப்பிட்ட தொகை வழங்கப்படும்.

தாத்ரி சம்பவம் அரசுக்கு பின்னடைவு

தாத்ரி கொலை உள்ளிட்ட சில சம்பவங்கள் பாஜகவுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை சிதைப்பதாக இந்த சம்பவங்கள் உள்ளன. இதில் அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. சில சம்பவங்கள் உண்மைக்கு மாறாக திரித்துக் கூறப்படுகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x