Published : 28 Oct 2020 06:19 AM
Last Updated : 28 Oct 2020 06:19 AM

சந்திரயான்-1 முதன்முதலில் கண்டுபிடித்ததை நிரூபிக்கும் வகையில் நிலவில் பெருமளவு தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு: நாசாவின் ‘சோபியா’ விண்கலத்தின் தொலைநோக்கி மூலம் உறுதி

நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் உறைந்து கிடக்கும் பனி போன்ற பகுதி.

பாரிஸ்

பூமிக்கு மிக அருகில் இருக்கும் நிலவில் தண்ணீர் உள்ளதா, ஆக்ஸிஜன் உள்ளதா, மனிதர்கள் உயிர் வாழ முடியுமா என்ற நோக்கில் ஆய்வுகள் தொடர்கின்றன.

குறிப்பாக இந்தியாவின் சந்திரயான்-1 விண்கலம் மூலம் கடந்த 2009-ம் ஆண்டு, நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை இந்தியா கண்டுபிடித்து உலக நாடுகளுக்கு முதன்முறையாக அறிவித்தது. ஆனால், நிலவில் இருப்பது தண்ணீர்தானா (ஹெச்2ஓ) அல்லது ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் மூலம் உருவான ஹைராக்ஸில் (ஓஹெச்) என்ற மூலக்கூறா என்பதில் சந்தேகம் இருந்தது. அது தண்ணீருக்கான மூலக்கூறுதான் என்று தற்போது நாசாவின் ‘சோபியா’ தொலைநோக்கி உறுதி செய்துள்ளது.

நிலவை ஆய்வு செய்யும் நாசாவின் சோபியா விண்கலத்தில் அதிநவீன, சக்திவாய்ந்த தொலைநோக்கி பொருத்தப்பட்டுள்ளது. இந்த விண்கலம் நிலவை பல மணி நேரம் சுற்றிவரும் போது, தொலைநோக்கி நிலவை பல கோணங்களில் படம் பிடித்து நாசாவுக்கு அனுப்பும். அதன்படி, தொலைநோக்கி மூலம் கிடைத்த படங்கள் மூலம் நிலவில் தண்ணீர் இருப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் நினைத்ததைவிட அதிக அளவில் நிலவின் மேற்பரப்பிலேயே பெரும் பகுதியில் உறைபனியும் தண்ணீரும் நிறைந்துள்ளது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட 2 ஆய்வுகள் மூலம் தெரிய வந்த தகவல்கள், ‘நேச்சர் ஆஸ்ட்ரானமி’ இதழில் கடந்த திங்கட்கிழமை வெளியாகி உள்ளது.

நிலவின் மேற்பரப்பில் சூரிய ஒளி படும் இடங்களில் பெருமளவு தண்ணீர் நிறைந்துள்ளது. சூரிய ஒளி படாத தென் துருவ பகுதிகளில் பெருமளவு பனி குவிந்துள்ளது என்று ஆய்வுக் கட்டுரை எழுதியவர்களில் ஒருவரான ஹவாய் இன்ஸ்டிடியூட் ஆப் ஜியோபிசிக்ஸ் அண்ட் பிளானடோலஜி பிரிவின் கேசே ஹன்னிபால் தெரிவித்தார்.

நிலவில் போதிய அளவு தண்ணீர் இருப்பது இன்னும் உறுதிப்படுத்தினால், அதை குடிநீராக, மூச்சுவிடுவதற்கான ஆக்ஸிஜனாக ராக்கெட் எரிபொருளாக பயன்படுத்த முடியும். மேலும், நிலவுக்கு மனிதர்களை அனுப்பி மேற்கொள்ளப்படும் ஆய்வு எளிதாகிவிடும் என்று ஹன்னிபால் நம்பிக்கை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x