

ஏமன் கடுமையான உணவு நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டுக் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் வெளியிட்ட அறிக்கையில், “ஏமனின் பல பகுதிகளில் உணவு நெருக்கடி அதிகரித்து வருவதால் அந்நாட்டில் உள்ள குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். ஊட்டச்சத்து குறைபாடு ஏமனில் இந்த ஆண்டு உச்சத்தைத் தொட்டுள்ளது.
கரோனாவை விட உணவுக் குறைபாடு அங்கு அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏமனில் போரை நிறுத்தவில்லை என்றால் நாம் பல இளம் குழந்தைகளின் வாழ்வை ஆபத்தில் தள்ள நேரிடும். நாங்கள் இதனை ஜூலை மாதம் முதலே எச்சரித்து வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா காலத்தில் நிதித் தட்டுப்பாடு நிலவுவதால் ஏமனில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான குழந்தைகள் பட்டினிக்குத் தள்ளப்படலாம். ஏமனில் உள்ள சுகாதார அமைப்புகள் கரோனா வைரஸைச் சமாளிக்கப் போராடி வரும் சூழலில் அங்கு குழந்தைகளின் நிலைமை மிக மோசமடைந்துள்ளது என்று ஐ.நா. முன்னரே தெரிவித்து இருந்தது.
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
மேலும், ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர். ஏமனில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏமன் போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.