

அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு ரஷ்யா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து சிபிசியில் நடந்தப்பட்ட நேர்காணலில் ஜோ பிடன் பேசும்போது, “அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு ரஷ்யா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அடுத்ததாக, அமெரிக்காவுக்குப் பெரும் போட்டியாக சீனா உள்ளது. நாம் இதனை எவ்வாறு கையாள்வது என்பதைப் பொறுத்திருத்து பார்ப்போம்” என்றார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் தவறிவிட்டதாக ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கடுமையாக விமர்சித்து வருகிறார். தேர்தல் முடிவு எதுவாக இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் மீதான தடையை நீக்குவேன் என்று ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
ஜோ பிடன் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாட்டைச் சரியாக வழிநடத்த மாட்டார் என்று ட்ரம்ப் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் ஒபாமா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.