

கடந்த 2009-ல் இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிகட்டப் போரில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாக ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. மேலும் இலங்கை அரசு மீது போர்க்குற்றம், மனித உரிமை மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந் துள்ளன.
இந்நிலையில், சமீபத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணைய (யுஎன்எச் ஆர்சி) மாநாட்டில், இலங்கை மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு குறித்து வெளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன் உள்நாட்டு அமைப்பே விசாரிக்கும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானம் குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் 2 நாட்கள் விவாதம் நடைபெற்றது. இதில், கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு அரசு அனுமதிக்குமோ என்று எதிர்க்கட்சிகள் சார்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா இதுகுறித்து பேசும்போது, “ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் சமீபத்திய தீர்மானத்தில் குறிப்பிட் டுள்ளது போல, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு தொடர்பாக உள்நாட்டு அமைப்புகளே, இங்குள்ள நடைமுறைப்படி விசாரிக்கும். கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு அனுமதிக்க மாட்டோம். போர் குற்றம் குறித்து விசாரணைக்கும் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.
கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணைய தலைவர் செய்த் ராத் அல் ஹுசைன் பரிந்துரை செய்திருந்தார். ஆனால் தீர்மானத்தில் அவரது பரிந்துரை ஏற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.