

இந்தியா, சீனா,ரஷ்யா நாடுகள் தாங்கள் வெளியிடும் மாசடைந்த, அழுக்கான காற்றைப் பற்றி கவலைப்படவில்லை. அதனால்தான் பாரீஸ் உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறியது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
பாரிஸ் பருவநிலை மாறுபாடு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுகிறது என அதிபர் ட்ரம்ப் கடந்த 2017-ம் ஆண்டு திடீரென அறிவித்தார். அமெரிக்கா அளிக்கும் கோடிக்கணக்கான டாலர் பணம் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கே வழங்கப்படுகின்றன என்று குற்றம்சாட்டியிருந்தார். இப்போதும் இதே குற்றச்சாட்டைக் அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடக்கிறது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர். குடியரசுக் கட்சி சார்பில் அதிபராக மீண்டும் அதிபர் ட்ரம்ப்பும், துணை அதிபர் பதவிக்கு மைக் பென்ஸும் போட்டியிடுகின்றனர்.
அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்து வரும் நிலையில் கரோனாவில் ட்ரம்ப் பாதிக்கப்பட்டு 10 நாட்களாக பிரச்சாரம் ஏதும் செய்யாமல் இருந்தார். தற்போது கரோனாவிலிருந்து மீண்ட நிலையில் மீண்டும் தனது பிரச்சாரத்தை அதிபர் ட்ரம்ப் தொடங்கியுள்ளார்.
டென்னஸி மாகாணத்தில் உள்ள நாஷ்வில்லே நகரில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் குடியரசுக் கட்சியின்அதிபர் வேட்பாளர் அதிபர் ட்ரம்ப் இடையே நேரடி விவாத நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அதிபர் ட்ரம்ப், பாரீஸ் பருவநிலை மாறுஉடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறியதை நியாயப்படுத்தியும், இந்தியா, சீனா,ரஷ்யாவை குற்றம்சாட்டியும் பேசினார்.
அதிபர் ட்ரம்ப் பேசுகையில் “ சீனாவைப் பாருங்கள் அசுத்தமான காற்றை வெளியிடுகிறது, ரஷ்யா, இந்தியாவைப பாருங்கள் அசுத்தமான காற்றை வெளியிடுகின்றன.
நான் பாரிஸ் பருவநிலை மாறுபாடு உடன்படிக்கையில் இருந்து வெளியேறியதற்கு காரணம் என்னவென்றால் லட்சம் கோடிக்கணக்கான டாலர்களை நாம் அதற்கு வழங்கினோம். நாம் நியாயமின்றி நடத்தப்பட்டோம் அதனால்தான் வெளியேறினேன்.
பருவநிலை மாறுபாட்டில் கார்பன்டை ஆக்ஸைடு உள்ளிட்ட நச்சு வாயுக்கள் வெளியேறுவதை சீனா, இந்தியா குறைக்கவில்லை, அதைத் தடுக்கவும் போதுமான நடவடிக்ைக எடுக்கவில்லை.
இந்த நாடுகளில் சுவாசிப்பதே கடினமாக இருக்கிறது. 2015-ம் ஆண்டு பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தின் மூலம் அதிகமான பலன்களையும், டாலர்களைையும் சீனா, இந்தியாதான் பெற்றன” எனக் குற்றம்சாட்டினார்.
கடந்த வாரம் நார்த்கரோலினா மாநிலத்தில் அதிபர் ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ட்ரம்ப் பேசும்போதும், இந்தியா, சீனா,ரஷ்யாவை குற்றம்சாட்டினார்.
அவர் பேசுகையில் “ உலக அளவில் காற்று மாசு அதிகரிப்பதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள்தான் காரணம். காற்றில் அதிகமான அளவு மாசடைந்த வாயுக்களை இந்த நாடுகள்தான் வெளியேற்றுகின்றன.
ஆனால், அமெரிக்காவைப் பொறுத்தவரை குறைந்த அளவுதான் காற்றில் மாசு வாயுவைக் கலக்கிறது. அதுமட்டுமல்லாமல், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும், எரிசக்தியிலும் தன்னிறைவு அடைந்துள்ளது” எனத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.