

கரோனாவுக்கு தடுப்பூசி கண்டறியும் சில நிறுவனங்களின் முயற்சியில் நல்ல முன்னேற்றம் உள்ளது, அடுத்த சில வாரங்களில் கரோனா தடுப்பூசி கிடைத்துவிடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறினார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 3-ம் தேதி நடக்கிறது. இதில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோபிடன் களம் இறங்கியுள்ளார். இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்
அமெரிக்காவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் தவறிவிட்டதாக ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், தேர்தல் முடிவு எதுவாக இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு ட்ரம்ப் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
அதிபர் வேட்பாளர்களான டொனால்டு ட்ரம்ப், ஜோ பிடனுக்கு இடையே கடந்த மாதம் 29-ம் தேதி ஓஹியோ மாகாணத்தில் முதல் நேரடி விவாதம் நடந்தது.
ட்ரம்ப்புக்கு கரோனா பரவல் ஏற்பட்டதால், அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி நடைபெற இருந்த இரண்டாவது விவாதம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் மூன்றாவது விவாதம் அக்டோபர் 22 ஆம் தேதி டென்னஸில் உள்ள நாஷ்வில்லி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு ட்ரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையிலான மூன்றாவது விவாதம் நடைபெற்றது. விவாத்தில் கலந்து கொண்டு ட்ரம்ப் பேசியதாவது:
கரோனா தொற்று பல மாகாணங்களில் குறைந்து வருகிறது. கரோனாவுக்கு தடுப்பூசி கண்டறியும் சில நிறுவனங்களின் முயற்சியில் நல்ல முன்னேற்றம் உள்ளது. அடுத்த சில வாரங்களில் கரோனா தடுப்பூசி கிடைத்துவிடும்.
அமெரிக்காவில் கரோனா இறப்பு விகிதம் குறைந்து உள்ளது. அரசின் தடுப்பு நடவடிக்கை மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ சீனாவே காரணம். நாட்டை முடக்கிய போது தவறு எனக்கூறியவர் ஜோ பிடன். தற்போது முன் கூட்டியே ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் எனக்கூறுகிறார். ஊரடங்கை தவிர்த்து ஜோ பிடனுக்கு எதுவும் தெரியாது.
அதிக தளர்வுகள் கொடுத்தால்தான் பொருளாதாரம் வளரும். ஊரடங்கால் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதற்கு முன் இதை எதிர்கொண்டது இல்லை.
பன்றிக்காய்ச்சல் வந்த போது ஜோ பிடன் என்ன செய்தார். ஜோ பிடன் போல என்னால் முடங்கி இருக்க முடியாது. ராணுவ குடும்பங்கள் உள்பட பல குடும்பங்களை சந்தித்து வருகிறேன். நோய் பாதித்த 99 சதவிதம் பேர் குணம் அடைந்துள்ளனர்.
இவ்வாறு ட்ரம்ப் பேசினார்.