

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு ட்ரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையிலான இறுதிக்கட்ட விவாதம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 3-ம் தேதி நடக்கிறது. இதில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோபிடன் களம் இறங்கியுள்ளார். இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்
அமெரிக்காவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் தவறிவிட்டதாக ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், தேர்தல் முடிவு எதுவாக இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு ட்ரம்ப் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
அதிபர் வேட்பாளர்களான டொனால்டு ட்ரம்ப், ஜோ பிடனுக்கு இடையே கடந்த மாதம் 29-ம் தேதி ஓஹியோ மாகாணத்தில் முதல் நேரடி விவாதம் நடந்தது.
ட்ரம்ப்புக்கு கரோனா பரவல் ஏற்பட்டதால், அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி நடைபெற இருந்த இரண்டாவது விவாதம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் மூன்றாவது விவாதம் அக்டோபர் 22 ஆம் தேதி டென்னஸில் உள்ள நாஷ்வில்லி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு ட்ரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையிலான மூன்றாவது விவாதம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த விவாதத்தை என்.பி.சி. செய்தியாளர் கிறிஸ்டன் வெல்கர் தொகுத்து வழங்கி வருகிறார். விவாதத்திற்கு 90 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.