Last Updated : 22 Oct, 2020 02:23 PM

 

Published : 22 Oct 2020 02:23 PM
Last Updated : 22 Oct 2020 02:23 PM

பிரேசிலில் கரோனா வைரஸுக்கு எதிரான ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்து: கிளினிக்கல் பரிசோதனையில் தன்னார்வலர் உயிரிழப்பு

கோப்புப்படம்

பிரசிலியா

பிரேசில் நாட்டில் கரோனா வைரஸுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜென்கா நிறுவனம் தயாரித்துள்ள கரோனா தடுப்பு மருந்தின் கிளினிக்கல் பரிசோதனையில் தன்னார்வலர் ஒருவர் திடீரென உயிரிழந்தார்.

இருப்பினும் தொடர்ந்து கிளினிக்கல் பரிசோதனை நடைபெறும். எந்தவிதமான இடையூறுமின்றி பரிசோதனை நடக்கும் என்று பிரேசில் அரசு தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஜென்னர் நிறுவனம், அஸ்ட்ராஜென்கா நிறுவனம் இணைந்து கரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து, பல்வேறு நாடுகளில் கிளினிக்கல் பரிசோதனையை மனிதர்களுக்கு நடத்தி வருகின்றன.

இதில் 3-ம் கட்ட கிளினிக்கல் பரிசோதனையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது. இதில் மருந்தை உடலில் செலுத்தி பரிசோதனைக்கு ஒப்புக்கொள்ளும் தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து பிரேசிலின் சுகாதார ஆணையமான அன்விசா கூறுகையில், “ ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கிளினிக்கல் பரிசோதனையில் எந்தவிதமான இடையூறும் ஏற்படாது. தொடர்ந்து பரிசோதனை நடக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில், “நாங்கள் தொடர்ந்து கிளினிக்கல் பரிசோதனை நடத்தி வருகிறோம். கவனமாகப் பரிசீலனை செய்து, தன்னார்வலர்களின் உடல் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டுதான் கிளினிக்கல் பரிசோதனை நடத்தப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.

பிரேசில் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “கிளினிக்கல் பரிசோதனையில் தன்னார்வலர் ஒருவர் இறந்தவுடன், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தங்களின் பரிசோதனையைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துக்கு கிளினிக்கல் பரிசோதனையில் சா போல நகரின் பெடரல் பல்கலைக்கழகம்தான் தேவையான உதவிகளை அளித்து வருகிறது.

பெடரல் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், “கிளினிக்கல் பரிசோதனையில் உயிரிழந்தவர் குறித்து விசாரணை நடத்த தனியாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பிரேசில் குடிமகன், ரியோடி ஜெனிரோ நகரைச் சேர்ந்தவர் என்பதை மட்டுமே வெளியிட முடியும்.

திட்டமிட்டபடி பரிசோதனை நடந்து வருகிறது. 10 ஆயிரம் தன்னார்வலர்கள் தேர்வு செய்ததில் 8 ஆயிரம் பேர் பங்கேற்றனர். 6 நகரங்களில் இவர்களுக்கு கிளினிக்கல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது’’ எனத் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கரோனாவில் மோசமாகப் பாதிக்கப்பட்டது பிரேசில் நாடாகும். இதுவரை 52 லட்சம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.54 லட்சம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x