

சைப்ரஸ் நாட்டில் குழந்தைக்கு அபாயகரமான முறையில் ஞானஸ்நானம் செய்ததாக பாதிரியார் ஒருவர் மீது வழக்குப் பதியப் பட்டுள்ளதோடு குழந்தையின் பெற்றோர் கடும் கோபமடைந்துள்ளனர்.
லிமாசோல் என்ற இடத்தில் உள்ள தேவாலயத்தில் என்டினா ஷிட்டா என்ற பெண்ணின் குழந்தைக்கு ஞானஸ்நான நிகழ்ச்சி நடந்தது.
அங்கிருந்த பாதிரியார் ஏற்கெனவே அழுது கதறிக் கொண்டிருந்த குழந்தையை நீர் நிரம்பிய பாத்திரத்தில் குழந்தையை மூழ்கடித்து ஞானஸ்நானம் செய்துவைத்தார். குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதோடு காயமும் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து கொதிப்படைந்த குடும்பத்தினர் பாதிரியார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
“நாங்கள் எல்லோரும் அவரிடம் கதறினோம் ஜாக்கிரதை ஜாக்கிரதை என்று அலறினோம், ஆனால் ஞானஸ்நானத்துக்கு நானே பொறுப்பு என்றார், குழந்தை சிகப்பாக மாறியது, அதிர்ச்சியில் உறைந்தோம், எங்களின் அழகான அந்த தினத்தை பாதிரி பாழடித்து விட்டார்” என்று குழந்தையின் தாய் என்டினா ஷிட்டா தெரிவித்தார்.
பாதிரியார் பிற்பாடு பெற்றோரிடம் மன்னிப்புக் கேட்டார், தான் வேண்டுமென்றே செய்யவில்லை என்று தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்தார்.