

பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் பணியாற்றிய நாசா விண்வெளி வீரர் 196 நாட்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்பினார்.
கிறிஸ் கேஸிடி என்ற விண்வெளி வீரர்தான் இந்தச் சாதனைக்குச் சொந்தக்காரர்.
இவரது குழுவில் உள்ள ரஷ்ய வீரர்களான இவான் வாக்னர், அனடோலி இவானிஷின் ஆகியோரும் கஜகஸ்தானில் உள்ள ழெஸ்கஸ்கன் என்ற இடத்தில் தரையிறங்கினர்.
பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் எக்ஸ்படீஷன் 63 என்ற பணித்திட்டத்தில் கமாண்டராகப் பணியாற்றிய கிறிஸ் கேஸ்டி புவி ஈர்ப்பு விசை உள்ளிட்ட பல்வேறு அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட்டவர்.
இவர்களுக்கு முதற்கட்ட மருத்துவச் சோதனைகள் நடத்தப்படவுள்ளன. பிறகு வீடு திரும்புகிறார்கள். கேஸிடி நாஸா விமானத்தைப் பிடித்து ஹூஸ்டன் திரும்புகிறார்.
வாக்னர், இவான்ஷின் ஆகியோர் ரஷ்யாவின் ஸ்டார் ஸிட்டிக்குப் பறக்கின்றனர்.
கேஸிடி மற்றும் பென்கென் ஆகிய விண்வெளி வீரர்கள் நிலையத்தின் பேட்டரிக்கு ஆற்றல் சேகரிக்க மொத்தம் 23 மணி 37 நிமிடங்கள் விண்வெளியில் நடந்துள்ளனர். இருவருக்கும் இது 10வது ஸ்பேஸ்வாக் ஆகும்.
கேஸிடி தற்போது விண்வெளி நிலையத்தில் மொத்தம் 378 நாட்கள் இருந்த விண் வெளி வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். அமெரிக்க விண் வெளி வீரர்களின் சாதனையில் இவர் 5ம் இடம் பிடித்துள்ளார்.