

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.
இம்ரான்கான் அரசுக்கு எதிராக 11 எதிர்க்கட்சிகள் சேர்ந்து பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (பிடிஎம்) தொடங்கியுள்ளன. இம்ரான்கான் ஆட்சிக்கு எதிராகப் பேரணிகள், மக்கள் விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தவும் முடிவு செய்துள்ளன. 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் இஸ்லாமாபாத்தை நோக்கி மிகப்பெரிய பேரணியும் நடத்த முடிவு செய்துள்ளன.
பாகிஸ்தானில் ராணுவமும், ஐஎஸ்ஐ அமைப்பும்தான் ஆட்சி நடத்துகின்றன. ராணுவமும், ஐஎஸ்ஐ அமைப்பும் சேர்ந்து இம்ரான்கானைக் கொண்டு பொம்மை ஆட்சி நடத்துகின்றன என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இன்றும் (திங்கட்கிழமை) இம்ரானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும், இம்ரான்கான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
இன்று நடந்த போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் கூறும்போது, “நீங்கள் (இம்ரான்கான்) மக்களிடமிருந்து பணியை எடுத்துக் கொண்டீர்கள், நீங்கள் அவர்களது உணவுகளை எடுத்துக்கொண்டீர்கள்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் முகமது அலி ஜின்னாவுக்கு எதிராக முழக்கமிட்டதற்காக மரியம் நவாஸின் கணவர் முகமது சஃப்தார் இன்று கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.