

சீனா தனது தென்கிழக்கு கடற்கரையில் படை பலத்தை அதிகரித்து வருகிறது. இது தைவான் மீது படையெடுப்பதற்கான ஆயத்தமாக இருக்கலாம் என சீன ராணுவ நடவடிக்கைகளை கண்காணித்து வருவோர் தெரிவிக்கின்றனர்.
சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டுப் போருக்கு பிறகு தைவான் உருவானது. என்றாலும் தைவான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என சீன அரசு கூறி வருகிறது. தேவைப்பட்டால் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளார்.
இந்நிலையில் சீனா தனது தென்கிழக்கு பிராந்தியத்தில் தனது பழைய டிஎப்-11, டிஎப்-15 ரக ஏவுகணைகளை படிப்படியாக நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக மிக நவீன ஹைப்பர் சானிக் ஏவுகணைகளை (டிஎப்-17) நிறுத்தியுள்ளது. இந்த ஏவுகணைகள் நீண்ட தொலைவில் உள்ள இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கக் கூடியவை ஆகும். சீனாவின் தென் கிழக்கில் உள்ள ஃபுஜியான், குவாங்டாங் மாகாணங்களில் கடற்படை தளங்கள் மற்றும் ஏவுகணைத் தளங்களை சீனா விரிவுபடுத்தியுள்ளது. இம்மாகாணங்களில் உள்ள ஒவ்வொரு ஏவுகணை தளமும் முழு அளவில் ஆயுதங்களை கொண்டுள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கை, தைவான் மீது படையெடுப்பதற்கான ஆயத்தமாக இருக்கலாம் என சீன ராணுவ நடவடிக்கைகளை கண்காணித்து வருவோர் தெரிவிக்கின்றனர். தைவான் மற்றும் கரோனா விவகாரத்தில் சீனா – அமெரிக்கா இடையே ஏற்கெனவே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சீனாவின் இந்த ஆயுதக் குவிப்பு தகவல் வெளியானது.
குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ராணுவ தளம் ஒன்றை சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள வீரர்களிடம், “போருக்கான தயார் நிலையில் மனதையும் உடலையும் வைத்துக் கொள்ளுங்கள். மிகவும் விழிப்புடன் இருங்கள். முழு விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் இருங்கள்” என்றார்.
சீனா சமீபத்திய ஆண்டுகளில் தைவானை சுற்றி தனது போர்ப் பயிற்சியையும் அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் சீனாவின் சுமார் 40 போர் விமானங்கள் சீனா – தைவான் இடையிலான எல்லையை கடந்துள்ளன. அப்போது படை பலத்தைக் கொண்டு சீனா அச்சுறுத்துவதாக தைவான் அதிபர் சாய் இங்-வென் கூறினார்.