

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக விரைவில் ரஷ்ட கடற்படை தாக்குதல் நடத்தும் என்று மூத்த கடற்படை அதிகாரி ஆண்ட்ரே கர்டாபோலவ் தெரிவித்துள்ளார்.
சிரியா, இராக்கில் பெரும் பகுதியைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தனி அரசை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன.
ஐ.எஸ்.ஸுக்கு எதிராக போரிட் டாலும் சிரியாவின் தற்போதைய அதிபர் பஷார் அல்-ஆசாத்தை அமெரிக்கா ஆதரிக்கவில்லை.
இந்நிலையில் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய விமானப் படை சிரியாவில் முகாமிட்டுள்ளது. சில வாரங்களாக ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக ரஷ்ய விமானப் படை தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து ஐ.எஸ்.ஸுக்கு எதிராக தற்போது ரஷ்யா கடற்படையையும் போரில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரஷ்ய கடற்படையின் மூத்த அதிகாரி ஆண்ட்ரே கர்டாபோலவ் கூறியதாவது: மத்திய தரைகடல் பகுதியில் ரஷ்ய போர்க்கப்பல்கள் முகாமிட்டுள்ளன. அந்த போர்க்கப்பல்கள் விரைவில் ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக தாக்குதலைத் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.