கார்ட்டூன்களை மாணவர்களிடத்தில் காட்டிய பிரெஞ்சு ஆசிரியரின் தலை துண்டிப்பு :  'இஸ்லாமிய பயங்கரவாத வெறிச்செயல்' என்று பிரான்ஸ் அதிபர் கடும் கண்டனம்

பிரான்ஸ் ஆசிரியர் தலைதுண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட இடத்தில் பிரெஞ்சு போலீஸார்.
பிரான்ஸ் ஆசிரியர் தலைதுண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட இடத்தில் பிரெஞ்சு போலீஸார்.
Updated on
1 min read

நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன்களை மாணவர்களிடத்தில் காட்டி, ‘பேச்சு, கருத்து சுதந்திரம்’ பற்றி வகுப்பறையில் விவாதத்தை நடத்திய பிரெஞ்சு ஆசிரியரின் தலை பள்ளிக்கு வெளியே துண்டிக்கப்பட்ட பயங்கர கொலை பிரான்ஸில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை பிரான்ஸ் அதிபர் இமானுயெல் மேக்ரோன் “இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல்” என்று கடுமையாக தாக்கிப் பேசினார்.

இந்த படுபாதகச் செயலை செய்த நபர் அடையாளத்தை இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை, ஆனால் இவரை போலீஸ் கைது செய்ய முயன்ற போது அவர் தப்பிச் செல்ல முயன்றதால் சுடப்பட்டார், இதில் காயத்தினால் அவர் பலியானார்.

2015-ல் சார்லி ஹெப்டோ என்ற நையாண்டிக்கான இதழில் கார்ட்டூன் வெளியானதையடுத்து தாக்குதல் நடத்தப்பட்டது. பாரிசில் உள்ள யூத சூப்பர் மார்க்கெட்டிலும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.

பிரான்ஸ் நீதியமைப்பு பயங்கரவாத அமைப்பு தொடர்புடைய தீவிரவாதக் கொலை என்றே இதனை வர்ணிக்கிறது.

ஆசிரியர் மீதான தாக்குதல் பாரீஸில் மாலை 5 மணியளவில் நடந்துள்ளது. இங்கு இந்த ஆசிரியர் பணியாற்றி வரும் மிடில் ஸ்கூலுக்கு வெளீயே, பாரீசுக்கு 30 கிமீ தொலைவில் உள்ள வடமேற்கு புற நகர்பகுதியில் இந்தக் தலைத்துண்டிப்பு கொலை நடந்துள்ளது.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த பிரான்ஸ் அதிபர் மேக்ரோன், “கொலையில் இஸ்லாமிய பயங்கரவாத அடையாளங்கள்” இருக்கிறது என்றார். ஆசிரியர்களைப் பாதுகாக்க ஒட்டுமொத்த நாடும் எழுந்து நிற்கும், பிற்போக்குத்தனம் ஒரு போதும் வெற்றி பெறாது, என்றார் அதிபர் மேக்ரோன். இது தொடர்பாக கொலையாளிக்கு நெருக்கமான 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட ஆசிரியர் வரலாற்றுப் பாட ஆசிரியர் ஆவார், வகுப்பறையில் இவர் நபிகள் கார்ட்டூனைக் காட்டி பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் பற்றி பேசியுள்ளார்.

ஆனால் நபிகள் கார்ட்டூனை காட்டும் முன்பு வகுப்பறையில் இருந்த முஸ்லிம் மாணவர்களை வெளியே சென்று விடுமாறு அவர் கூறியதாகத் தெரிகிறது.

இது குறித்து மாணவர் பெற்றோர் ஒருவர் ஆங்கில செய்தி ஏஜென்சிக்கு தெரிவிக்கும்போது, “வெளியே போய்விடுங்கள் உங்கள் உணர்வுகளை நான் புண்படுத்த விரும்பவில்லை” என்று ஆசிரியர் கூறியதாக தெரிவித்தனர்.

ட்விட்டர் பக்கம் ஒன்றில் ஆசிரியரின் தலை புகைப்படம் இருந்தது குறித்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

கொலை நடந்த இடமே போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது ஏனெனில் பயங்கரவாதிகள் மேலும் தாக்குதல் நடத்தலாம் என்று அச்சம் இருந்ததாக் போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in