Last Updated : 17 Oct, 2020 11:39 AM

 

Published : 17 Oct 2020 11:39 AM
Last Updated : 17 Oct 2020 11:39 AM

பாகிஸ்தானில் ராணுவம், ஐஎஸ்ஐதான் ஆள்கின்றன; இம்ரான்கான் ஆட்சி நடத்தவில்லை: நவாஸ் ஷெரீப் குற்றச்சாட்டு 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக குஜ்ரன்வாலா நகரில் நேற்று 11 எதிர்க்கட்சிகள் சார்பில் நடந்த பொதுக்கூட்டம் : படம் ஏஎன்ஐ

லாகூர்

பாகிஸ்தானில் ராணுவமும், ஐஎஸ்ஐ உளவு அமைப்பும் சேர்ந்துதான் ஆட்சி நடத்துகின்றன. பெயரளவுக்கு பொம்மையாக இம்ரான்கானை ஆட்சியில் அமரவைத்துள்ளன என்று முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் நவாஸ் ஷெரீப் குற்றம்சாட்டினார்.

பல்வேறு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சிறையில் இருந்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். சிகிச்சைக்காக லண்டனுக்கு நவாஸ் ஷெரீப் சென்றுள்ளார்.

இந்நிலையில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக 11 எதிர்க்கட்சிகள் சேர்ந்து பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம்(பிடிஎம்) தொடங்கியுள்ளன. இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக பேரணிகள், கூட்டங்கள், மக்கள் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தவும் முடிவு செய்துள்ளன. 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் இஸ்லாமாபாத்தை நோக்கி மிகப்பெரிய பேரணியும் நடத்த முடிவு செய்துள்ளன.

இதற்கிடையே இந்த கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம், பேரணி குஜர்ன்வாலா நகரில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பிடிஎம் அமைப்பின் தலைவர் மவுலானா பஸ்லூர் ரெஹ்மான், பிபிபி கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ ஜர்தாரி, நவாஸ் ஷெரீப் மகள் மரியம் நவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் பங்கேற்ற நவாஸ் ஷெரீப் அதில் பேசியதாவது:

ராணுவத் தளபதி ஜெனரல் குவாமர் ஜாவித் பஜ்வாதான் என்னுடைய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தார். 2018-ம் ஆண்டு தேர்தலில் இந்த தேசத்துக்கு தகுதியில்லாத இம்ரான் கானை ஆட்சியில் ராணுவம் அமரவைத்தது. நாடு மோசமாக சீரழிந்ததற்கு நேரடியான குற்றவாளியான ஜெனரல் பஜ்வா இதற்கு பதில் அளிக்க வேண்டும்.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் : கோப்புப்படம்

பாகிஸ்தான் மக்கள் இன்று சந்திக்கும் துயரங்கள், வேதனைகளுக்கு ஜெனரல் பஜ்வாதான் பொறுப்பேற்க வேண்டும். என்னுடைய ஆட்சியை கவிழ்த்ததற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பும், ஐஎஸ்ஐ தலைவர் ஜெனரல் பியாஸ் ஹமீதுவும் காரணம். என்னுடைய ஆட்சியை கவிழ்த்தற்கு ஹமீதும் பதில் அளிக்க வேண்டும்.

என்னை நீங்கள் துரோகி என்று குற்றம்சாட்டலாம், என் சொத்துக்களை பறிமுதல் செய்யலாம், பொய்யான வழக்குகளை பதிவு செய்யலாம். ஆனால், தொடர்ந்து நான் என் மக்களின் நலனுக்காகப் பேசுவேன். இம்ரான் கானின் பெயரைக் கூற ஒருபோதும் அஞ்சமாட்டேன். என்னையும், என் குடும்பத்தாரையும் துரோகிகள் என்று இம்ரான் தரப்பு அழைக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல. தகுதியில்லாதவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள்.

பாகிஸ்தானில் ராணுவமும், ஐஎஸ்ஐ அமைப்பும்தான் ஆட்சி நடத்துகின்றன. ராணுவமும், ஐஎஸ்ஐ அமைப்பும் சேர்ந்து இம்ரான்கானை கொண்டு பொம்மை ஆட்சி நடத்துகின்றன. அரசியலமைப்புச் சட்டத்தை மீறியவர்கள் ஏன் தண்டிக்கப்படவில்லை?

ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட என் அரசு ஏன் நீடிக்கவில்லை. பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் மேலாக ஓர் அரசு செயல்படுகிறது. அதுதான் ராணுவம், ஐஎஸ்ஐ. இரு அரசுகள் நிர்வாகத்தில் இருந்தால் யார் பொறுப்பேற்பது?

இவ்வாறு நவாஸ் ஷெரீப் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x