

வளர்ச்சியுறும் பொருளாதாரங்களில் இந்தியாவில் மட்டுமே வளர்ச்சி உள்ளது என்று சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லாகார்ட் தெரிவித்துள்ளார்.
உலகப் பொருளாதாரத்தில் தற்போது ஒரு சில பிரகாசப் புள்ளிகளில் இந்தியாவும் உள்ளது என்று கிறிஸ்டின் லாகார்ட் தெரிவித்துள்ளார்.
நேற்று, அங்காராவில் நடைபெற்ற ஜி20 நாட்டு நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகள் கூட்டத்தில் இதனை அவர் தெரிவித்தார்.
முன்னேறிய நாடுகள், வளரும் நாடுகள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, முன்னேறிய நாடுகள் பலவற்றில் பொருளாதார சிக்கல்கள் உள்ளது தெரிய வருகிறது, வளரும் பொருளாதாரங்களில் சீனாவில் பிரச்சினை உள்ளது, ஆனாலும் பங்குச் சந்தைகள் அதனை ஊதிப்பெருக்கும் அளவுக்கு இல்லை.
“வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் வளர்ச்சி என்ற ஒன்று இருக்குமேயானால் அது இந்தியாவில்தான், உலகப் பொருளாதாரத்தின் ஒரு சில பிரகாசப் புள்ளிகளில் இந்தியா உள்ளது” என்று லாகார்ட் கூறியதாக சந்திப்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பில் மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனும் கலந்து கொண்டார். தென் கொரியா, ஆஸ்திரேலியா, சீனா, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கொள்கை வகுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே பொருளாதார வீழ்ச்சியை சீனா சந்திக்காது என்றும் வளர்ச்சி விகிதம் சற்றே மெதுவாக இருக்கும் என்றும் அந்நாட்டு பிரதிநிதி தெரிவித்துள்ளார்.