

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தனது ஆட்சியில் ஏற்பட்ட தோல்விக்காக மக்களிடையே மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து கொரியா டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், “ வடகொரியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75-வது ஆண்டு விழாவில் பங்கேற்று பேசிய அந்நாட்டு அதிபர் கிம், ஆட்சியில் தான் அடைந்த தோல்விக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். நான் ஆட்சியில் தோல்வி அடைந்திருகிறேன். எனது முயற்சிகள் போதுமானதாக இல்லை. கடலளவும், வானளவும் மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். என் மீது அனைத்து மக்களும் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் நன்றி” என்று கூறப்பட்டுள்ளது.
கிம்மின் பேச்சை கேட்டு அங்கு குழுமியிருந்த ராணுவ வீரர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் பலரும் அழத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
முன்னதாக, உலகம் முழுவதும் கரோனாவில் பல்வேறு நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகும்போது வடகொரியாவில் மட்டும் கரோனா தொற்று குறித்த எந்தத் தகவலும் வெளியிடப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் ஆளும் தொழிலாளர் கட்சியின் அதிபர் கிம், தங்கள் நாட்டில் ஒருவருக்குக் கூட கரோனா தொற்று இல்லை என்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
மேலும் 75-வது ஆண்டு விழாவில் ஏவுகணைகளின் அணிவகுப்பையும் வடகொரியா நடத்தியது. ஏவுகணைச் சோதனை காரணமாக பொருளாதாரத் தடைக்கு உள்ளாகி வரும் நிலையில் இந்த அணிவகுப்பை வடகொரியா நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது